அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு: அதானி குழுமம் விளக்கம்
அதானி கிரீன் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றமும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையமும் பதிவு செய்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, முற்றிலும் மறுக்கிறோம் என்று அதானி குழுமம் விளக்கம் கொடுத்துள்ளது.
இந்தியாவின் சில மாநிலங்களில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 26 கோடி டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2,100 கோடியை லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளைப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஜூலை 2021 மற்றும் பிப்ரவரி 2022 இடையேயான காலகட்டத்தில், ஒடிஸா, தமிழ்நாடு, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்தில், கௌதம் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகளில் அதானி குழும நிறுவனப் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளன.
இந்த நிலையில், அதானி குழுமம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், லஞ்சம் கொடுத்த விவகாரத்தை மறைத்து, அமெரிக்காவில் அதானி குழுமம் முதலீடுகளை ஈர்த்ததாக அதானி கிரீன் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றமும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையமும் பதிவு செய்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை, முற்றிலும் மறுக்கிறோம்
எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்றத்தில் நிருபிக்கும் வரை நாங்கள் நிரபராதிகள்தான் என்று அமெரிக்க நீதித் துறையே குறிப்பிட்டிருக்கிறது. எனவே, அமெரிக்க நீதிமன்றம் முன்வைத்த குற்றசாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
அதானி குழுமம் எப்போதும், அதன் செயல்பாடுகளின் அனைத்து அதிகார வரம்புகளிலும் உயர்ந்த நிலையான ஆளுமை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறையை பின்பற்றுவதை உறுதி செய்திருக்கிறது. எனவே, எங்களது பங்குதாரர்கள், கூட்டாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் ஒன்றை உறுதியளிக்கிறோம், அதாவது, அதானி குழும நிறுவனமானது அனைத்துச் சட்டங்களுக்கு உள்பட்டு இயங்குவதோடு, மிகக் கட்டுக்கோப்பான நிறுவனமாக உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று அதானி குழும செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கை கூறுகிறது.