''விலா எலும்பு உடைஞ்சும் எங்கம்மா கருவை கலைக்கல'' - ஒரு கலெக்டரின் கதை
IPL Mega Auction: அண்டர்டாக்ஸை சாம்பியனாக்கிய ஷேன் வார்னே - RR அணிக்குள் எப்படி வந்தார்? IPL Rewind
2008 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் அது. ஐ.பி.எல் என புதிதாக தொடங்கப்பட்ட லீகில் ராஜஸ்தான் அணி தங்களின் முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து மோதுகிறது. சீசனை வெற்றியோடு தொடங்க நினைத்த ராஜஸ்தானுக்கு பெருத்த ஏமாற்றம். இதெல்லாம் ஒரு அணியே இல்லை என்பது போல ராஜஸ்தானை ஓங்கி அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அந்தப் போட்டியை வென்றிருந்தது. மற்ற அணிகளை விட ஒப்பீட்டளவில் இளம் வீரர்களை உள்ளடக்கிய அணி ராஜஸ்தான். அந்த வீரர்களால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. போட்டிக்குப் பிறகு ராஜஸ்தான் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் மயான அமைதியாக இருக்கிறது. அத்தனை பேர் முகத்திலும் சோகம். சில வீரர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.
அணியின் கேப்டனான ஷேன் வார்னே இந்த காட்சிகளையெல்லாம் பார்க்கிறார். குரலை உயர்த்தி அத்தனை பேரையும் மீட்டிங்கிற்கு அசம்பிள் ஆக சொல்கிறார். 'நாம எதையாச்சு இழக்கக்கூடாதத இழந்துட்டோமா? நம்ம கூட இருந்த யாராவது செத்துப் போயிட்டாங்களா?' என கணீர் குரலில் கேட்கிறார். 'No..No...' என முணுமுணுக்கும் குரலில் வீரர்களிடமிருந்து பதில் வருகிறது. 'அப்புறம் எதுக்கு உட்காந்து அழுதுகிட்டு இருக்கீங்க?...இன்னும் நமக்கு 13 மேட்ச் மிச்சம் இருக்கு. நம்பிக்கையோட இருங்க. எல்லாம் நல்லதா நடக்கும்.' என தன்னுடைய வீரர்களை உற்சாகப்படுத்தி அந்த மீட்டிங்கை முடித்தார்.
இதற்கு பிறகு ராஜஸ்தான் எடுத்தது ருத்ரதாண்டவம். லீகில் அடுத்ததாக ஆடிய 12 போட்டிகளில் 11 போட்டிகளை வென்றது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அரையிறுதியில் டெல்லியை வீழ்த்தி பழி தீர்த்தது. இறுதிப்போட்டியில் சென்னையை வீழ்த்தி ஐ.பி.எல் இன் முதல் சாம்பியன் என்கிற பெருமையைப் பெற்றது.
அந்த முதல் சீசனில் ராஜஸ்தான் நிகழ்த்தியது மாயாஜாலம். அதற்கு முழுமுதற் காரணம் அந்த அணியின் கேப்டனாக இருந்த ஷேன் வார்னே.
2008 இல் ஐ.பி.எல் தொடங்கப்பட்ட போது பொருளாதாரரீதியாக மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டிருந்த அணி ராஜஸ்தான்தான். வெறும் 67 மில்லியன் டாலர் ரூபாய்க்குதான் அந்த அணி விற்கப்பட்டிருந்தது. இருப்பதிலேயே அதிகமாக விற்கப்பட்ட மும்பை அணியின் மதிப்பு அப்போது 111.9 மில்லியன் டாலர். வர்த்தகரீதியாக செல்வாக்கு குறைந்த அணியாகத்தான் ராஜஸ்தான் இருந்தது. ஆனால், அந்த அணியின் நிர்வாகத்துக்கு ஒரு வெற்றிகரமான கேப்டனை தேர்வு செய்ய தெரிந்திருந்தது.
2008 பிப்ரவிரியில் மும்பையில் நடந்த முதல் ஐ.பி.எல் ஏலத்தில் ஷேன் வார்னேவின் பெயர்தான் முதல் பெயராக வாசிக்கப்பட்டது. எந்த அணியும் ஷேன் வார்னேவை வாங்க முன்வரவில்லை. ஏனெனில், ஷேன் வார்னேவுக்கு வயதாகிவிட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிலிருந்தும் அவர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். லைம்லைட்டில் இல்லாத ஒரு வீரரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. ஆனால், ராஜஸ்தான் துணிந்து கையை தூக்கியது. அந்த துணிச்சலுக்கு கிடைத்த பரிசுதான் முதல் ஐ.பி.எல் சாம்பியன் என்கிற கௌரவம். அடிப்படை விலையான 4 லட்சம் அமெரிக்க டாலருக்கே ராஜஸ்தான் அணி அவரை வாங்கியது.
ஷேன் வார்னே ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டதை வைத்து சில கட்டுக்கதைகளும் இணையத்தில் சுற்றியது. பிரமாண்டமான லீகாக விளம்பரப்படுத்தி அதன் முதல் ஏலத்தை நடத்துகிறோம், அதில் முதல் வீரரையே எந்த அணியும் வாங்காமல் விட்டால் நன்றாக இருக்காது என நினைத்து லலித் மோடிதான் கண்ணைக் காட்டி ராஜஸ்தான் அணியை வார்னேவை வாங்க வைத்ததாகவும் சொல்வார்கள்.
ஆனால், உண்மையில் ராஜஸ்தான் அணி ஷேன் வார்னேவுடன் ஒரு டீல் பேசியிருந்தது. ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக பதவி வகிப்பதோடு பயிற்சியாளராகவும் இருந்து ஒரு அணியை கட்டமைத்துக் கொடுக்க வேண்டி அந்த அணி வார்னேவை அணுகியது. அதன்படி, வார்னேவுக்கு ஊதியத்தோடு அணியில் 0.75% பங்குகளை வழங்க வேண்டும் என்பதே இருவருக்குமிடையே இறுதியான ஒப்பந்தம். இதன்படிதான் ஷேன் வார்னே அணிக்குள் வந்தார்.
அந்த 2008 ராஜஸ்தான் அணியை இப்போது பார்த்தால் அத்தனை வீரர்களும் ஸ்டார் வீரர்களாக தெரிவார்கள். ஆனால், அப்போது வளர்ந்து வரும் இளம் வீரர்களை மையப்படுத்திதான் வார்னே அந்த அணியை கட்டமைத்தார்.
ஷேன் வாட்சன் அப்போது ஆஸ்திரேலிய அணியில் நிரந்தர இடம் இல்லாமல் திணறிக்கொண்டிருந்தார். அவரை, 'நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன். நீ என்னோடு வா!' என நம்பிக்கையளித்து ராஜஸ்தான் அணிக்குள் கொண்டு வந்தார். பாகிஸ்தான் அணிக்கு அறிமுகமே ஆகியிடாத சோஹைல் தன்வீர் என்கிற பௌலரை பாகிஸ்தானிலிருந்து அழைத்து வந்தார். வார்னேவுக்கு சரியான திறமையாளர்களை கண்டறியும் ஆற்றல் தீர்க்கமாக உண்டு. 2010 சமயத்திலேயே அணியில் நிரந்தர இடமில்லாத போதும் ரோஹித்தான் இந்திய அணியின் அடுத்த ஸ்டார் என கணித்திருந்தார். 2008 இல் ராஜஸ்தான் அணிக்கு ஆடிய போதே ஜடேஜாவுக்கு 'ராக் ஸ்டார்' பட்டத்தை கொடுத்துவிட்டார்.
நல்ல திறமையாளர்களை கண்டறிந்து அவர்களை பட்டைத் தீட்டி அணிக்காக பயன்படுத்திக் கொள்வதில் வார்னே கில்லியாக இருந்தார். ஆஸ்திரேலிய அணியில் கூட அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 1998-99 காலக்கட்டத்தில் ஒரு சில போட்டிகளுக்கு மட்டுமே வார்னே ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். அதனால் ராஜஸ்தான் அணியில் கேப்டனாக கிடைத்த வாய்ப்பை வார்னே மகிழ்ந்து அனுபவித்தார். பெரும் நேர்மையோடு அந்தப் பதவியை பயன்படுத்திக் கொண்டார்.
அணி நிர்வாகம் சில வீரர்களுக்கு சிபாரிசு செய்கையில், 'நான் திறமையின் அடிப்படையில் அணியை கட்டமைத்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் வீரர்களை அணியில் சேர்க்க வேண்டுமெனில், சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால், எனக்கு இப்போதே ஆஸ்திரேலியாவுக்கு டிக்கெட் புக் செய்து விடுங்கள்!' என முகத்துக்கு நேராக கூறியிருக்கிறார்.
மூத்த வீரராக இளம் வீரர்களை கடும் கட்டுப்பாட்டோடு வழி நடத்தியிருக்கிறார். மீட்டிங்கிற்கு யாராவது தாமதமாக வந்தால் அன்றைய நாள் முழுவதும் அந்த வீரர் பிங் நிற பொம்பை ஒன்றை கையில் வைத்துக் கொண்டே சுற்ற வேண்டும் போன்ற வினோத தண்டனைகளையெல்லாம் கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு ஹெட்மாஸ்டரை போலத்தான் அந்த அணியை வார்னே வழிநடத்தியிருக்கிறார். ஆனால், திறமையான வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய இடத்தையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அந்த அணியில் ஆடிய யூசுப் பதான், ஜடேஜா, வாட்சன் என பலரும் தனித்தனியாக ஒரு பெரும் உயரத்தை எட்டினர்.
2008 ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டி ரொம்பவே சுவாரஸ்யமானது. சென்னையும் ராஜஸ்தானும்தான் அந்தப் போடியில் மோதியிருந்தன. சென்னை அணியின் கேப்டன் தோனி. அவர் 2008 ஏலத்தில் இருப்பதிலேயே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர். வார்னே அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட வீரர். தோனி டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டன். வார்னே அந்த சீசனுக்கு முன்பாக பெரிதாக டி20 போட்டிகளிலேயே ஆடியிராதவர். இத்தனை முரண்கள் இருந்தாலும் அந்த இரு கேப்டன்களுக்கிடையேயான போட்டியில் வென்றது ஷேன் வார்னேதான். கடைசிப் பந்து வரை சென்று 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்று சாம்பியனாகியிருக்கும்.
இந்தியன் ப்ரீமியர் லீகின் முதல் சீசனில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் வீரர்கள் கேப்டனாக இருந்த அணிகளை பின்னுக்குத் தள்ளி ஒரு வெளிநாட்டு கேப்டன் கோப்பையைத் தட்டிச் சென்றது நிச்சயமாக ஆச்சர்யமான விஷயம்தான்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...