மகாராஷ்டிர தேர்தல்: பணம் கொடுத்து சிக்கிய பாஜக தலைவர் வினோத் தாவ்டே?
ஈரோடு: மாநில அளவிலான ஓட்டப்பந்தயம்; தங்கம் வென்று அசத்திய சகாய ஜெமிமா!
தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான ஓட்டப்பந்தய போட்டியில் தூத்துக்குடி மாவட்டம், T.சவேரியார்புரத்தை சேர்ந்த சகாய ஜெமிமா என்ற பத்தாம் வகுப்பு மாணவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஜெமிமாவின் வெற்றி குறித்து பள்ளி முதல்வர் மரிய செல்வராணி கூறுகையில், ``மாணவியின் முழுமனதான ஈடுபாடு, தொடர் பயிற்சி மற்றும் உழைப்புதான் மாணவியின் வெற்றிக்கான காரணம். பள்ளிக்கென தனியாக விளையாட்டு பயிற்சியாளர் இல்லாத நிலையிலும் மாணவ-மாணவியரின் ஈடுபாடு மற்றும் திறமைகளை கருத்தில் கொண்டு பள்ளியின் சார்பில் மாணர் களின் வளர்ச்சிக்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.
சிறந்த விளையாடும் திறன் கொண்ட மாணவ மாணவியரைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி கொடுத்து, அவர்களை ஊக்கப்படுத்தி, மாணாக்கரின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தி வருகிறோம். எங்கள்சி பள்ளியின் மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று அரையிறுதி வரை முன்னேறினர்... பயிற்சிகளை இன்னும் அதிகரித்தால் பல மாணாக்கரின் திறமைகள் சிறப்பாக வெளிப்படும்.
எங்கள் பள்ளி மாணவி சகாய ஜெமிமாவின் வெற்றியை பள்ளியின் 75-வது வருடத்தில் நடைபெற்ற சாதனையாகவே கருதுகிறோம்" என்றார்.
புனித சவேரியார் பள்ளியின் சார்பிலும் ஊர் பொதுமக்கள் சார்பிலும் தங்கம் வென்று ஊருக்கு திரும்பிய மாணவியைப் பாராட்டி வரவேற்பு விழா நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற மாணவியின் பெற்றோரான மிக்கேல் பாஸ்கர் மற்றும் சகாயரதி, தங்கள் மகளின் வெற்றிக்கு அச்சாணியாய் இருக்கும் அனைவருக்கும் தங்களது நன்றியை மகிழ்வுடன் பகிர்ந்தனர்.
சகாய ஜெமிமா தனது வெற்றி குறித்து கூறுகையில், ``நான் பயின்று வந்த பள்ளியில் அளிக்கப்பட்ட ஊக்கத்தின் காரணமாகவே ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க ஆரம்பித்தேன். மேலும், வருங்காலத்தில் இந்தியாவின் ஓட்டப்பந்தய விளையாட்டு வீராங்கனையாக தடகளப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன்" என்று தனது கனவு பற்றி கூறினார்.
பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஜெமிமா, தினமும் தருவை மைதானத்தில் காலை 6 முதல் 8 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை ஓட்டப்பயிற்சிகளில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவித்தார். கல்வி கற்பதில் கவனம் செலுத்துவதுடன் சேர்த்து விளையாட்டு திறன்களை வளர்க்கவும் மாணவி தனிக்கவனம் செலுத்தி வருவதை பகிர்ந்தார்.
எட்டாம் வகுப்பு பயின்ற போது விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டு, பல ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்க ஆரம்பித்ததாக அவர் கூறினார். எண்ணற்ற ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்ற இவர், தற்போது ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றதாக மகிழ்வுடன் கூறினார்.
அக்டோபர் மாதம் நடைபெற்ற பென்டாத்லான் தென் மண்டல போட்டிகளில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி கண்டதாகவும் அவர் கூறினார். மேலும், பல போட்டிகளில் திறம்பட பங்கெடுத்து வெற்றியை உரிதாக்க விரும்புவதாகவும் தன் கனவை பகிர்ந்தார் ஜெமிமா.
தனது வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த தன்னுடைய பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர் பிரான்ஸிஸ், விளையாட்டு பயிற்சியாளரான அஜீஸ், முதல்வர் மரிய செல்வராணி மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உளமார நன்றியை உரிதாக்குவதாக பகிர்ந்தார்.
வாழ்த்துகள் சகாய ஜெமிமா!!!