IPL Mega Auction: 'இந்தியா சிமெண்ட்ஸ் Vs ரிலையன்ஸ்' தோனியை CSK வாங்கிய கதை | 2008 Auction Rewind - 1
தோனி, இன்றைய தேதிக்கு இந்திய விளையாட்டுலகம் இதற்கு முன் கொண்டாடிடாத அளவுக்கு கொண்டாடப்படும் மாபெரும் வீரர். ஐ.பி.எல் என்கிற ஒரு கிரிக்கெட் லீகே அவரை நம்பியிருக்கிறது. அவருக்காக லீகின் விதிகளையே மாற்றியமைத்து அவர் தொடர்ந்து ஆடுவதை உறுதி செய்கிறது. ஐ.பி.எல் தன்னுடைய வணிக முகமாக தோனியைத்தான் நினைக்கிறது. ரசிகர்களும் அவருக்காகத்தான் மைதானத்தில் கட்டி ஏறுகின்றனர். இப்படிப்பட ஒரு வீரரின் பெயர் ஐ.பி.எல் இன் முதல் ஏலத்தில் ஒலிக்கப்பட்ட போது அந்த அரங்கம் எப்படியிருந்திருக்கும்? கால ஓட்டத்தில் பின்னோக்கி பயணித்து 17 ஆண்டுகளுக்குப் பின் சென்று வருவோம்.
பிப்ரவரி 20, 2008. ஐ.பி.எல் இன் பிரபல ஏலதாரரான ரிச்சர்ட் மேட்லி குறிப்பிட்ட 'முதல் ஏலப் போர்' நடந்த தினம்தான் அது. மும்பையின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் புதிதாக தொடங்கப்பட விருக்கும் ஐ.பி.எல் எனும் லீகின் முதல் ஏல நிகழ்வு நடைபெறுவதற்காக அத்தனை ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன.
இந்திய கிரிக்கெட்டின் முக்கிய மைல்கல்லாக இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது. கால்பந்தின் ப்ரீமியர் லீகுகளை போல கிரிக்கெட்டின் வணிக எல்லைகளையும் இந்த ஐ.பி.எல் விஸ்தரிக்கும் என வெகுவாக நம்பப்பட்டது. எட்டு பெரும் முதலாளிகள் எட்டு நகரங்களை மையமாக கொண்ட அணிகளை வாங்கியிருந்தார்கள். ஏலத்திற்கு முன்பாகவே அணிகள் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் படலம் தொடங்கிவிட்டது. ஏலத்துக்கு முன்பாகவே ஒவ்வொரு அணியும் 'Iconic Player' என ஒரு வீரரை தங்களுக்கென ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றது ஐ.பி.எல் நிர்வாகம். இப்படி ஒப்பந்தம் செய்யும் வீரருக்கும் ஏலத்தில் அந்தந்த அணிகள் அதிக தொகை கொடுத்து வாங்கும் வீரரை விட 15% அதிகமாக கொடுக்க வேண்டும். இதுதான் விதிமுறை. சச்சினை எடுக்காமல் மும்பை என்ற ஒரு அணி இருக்க முடியுமா?
மும்பை சச்சினை தங்களின் 'Iconic Player' ஆக ஒப்பந்தம் செய்தது. கொல்கத்தா கங்குலியை புக் செய்தது. டெல்லிக்கு சேவாக், பஞ்சாபுக்கு யுவராஜ். இப்படி முக்கியமான அணிகளெல்லாம் தங்களின் மண்ணின் மைந்தர்களையே தங்களின் 'Iconic Player' ஆகவும் ஒப்பந்தம் செய்து கொண்டன.
சென்னை அணியை வாங்கியிருந்த 'இந்தியா சிமெண்ட்ஸ்' நிறுவனம் இந்த விஷயத்தின் கொஞ்சம் பொறுமை காட்டியது. சென்னை அணி எந்த வீரரையும் 'Iconic' வீரராக ஒப்பந்தம் செய்யவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. சச்சினுக்கும் கங்குலிக்கும் சவாலளிக்கும் வகையில் தமிழ் வீரர்கள் யாரும் இல்லை என்பது முதல் காரணம். இரண்டாவது, 'Iconic' வீரராக ஒப்பந்தம் செய்பவருக்கு ஏலத்தில் எடுக்கும் டாப் வீரரை விட 15% அதிகமாக கொடுக்க வேண்டும் என்கிற விதிமுறை. ஏனெனில், அப்போது ஒரு அணி வீரர்களை வாங்க மொத்தமாக 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்திய மதிப்பில் தோராயமாக 20 கோடி. ஏலத்தில் எடுக்கும் டாப் வீரருக்கும் 'Iconic' வீரருக்குமே பெரும்பாலான தொகை சென்றுவிட்டால் ஒரு அணியை எப்படி கட்டமைக்க முடியும் என்பதுதான் இந்தியா சிமெண்ட்ஸின் கேள்வி. அதனால்தான் ஏலத்துக்கு முன்பாக கொஞ்சம் அமைதியாக இருந்தனர். ஆனால், இந்த அமைதியே பின்னாளில் அவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கவும் காரணமாக இருந்தது.
பிப்ரவரி 20 ஆம் தேதி வந்தது. பிரபல ஏலதாரரான ரிச்சர்ட் மேட்லிதான் ஏலத்தை நடத்தினார். முதல் வீரராக ஷேன் வார்னேயை அறிமுகப்படுத்தினார். அவரை அடிப்படை விலைக்கே ராஜஸ்தான் அணி வாங்கி ஏலத்தை தொடங்கி வைத்தது. அடிப்படை விலைக்கே வாங்கப்பட்ட அவர் முதல் சீசனிலேயே ராஜஸ்தான் அணியை சாம்பியன் ஆக்கியது தனி வரலாறு. அதைப் பற்றி பின்னால் பார்க்கலாம்.
அந்த ஏல அரங்கில் முக்கியமான வீரர்களின் வரிசையில் தோனியின் பெயரும் ஒலிக்கப்பட்டது. தோனியின் மீது அத்தனை அணிகளுக்குமே ஒரு கண். ஏனெனில் சீனியர்களே ஒதுங்கி நின்ற போது ஒரு இளம் அணியை வழிநடத்தி தென்னாப்பிரிக்கா சென்று டி20 உலகக்கோப்பையை வென்று வந்த கேப்டன். இந்த ஏலம் நடப்பதற்கு 5 மாதங்களுக்கு முன்புதான் உலக்கோப்பையை வென்ற தோனியின் அணியை வரவேற்கிறோம் என்று மும்பையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு கூட்டம் கூடியது. அரபிக் கடலோரத்தில் அலைகடலென கூடிய அந்தக் கூட்டம் தோனிதான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்பதை உரக்கக் கூறியது. அதே மும்பையில் தோனியின் பெயர் இப்போதும் ஒலிக்கப்பட்டது.
தோனியின் அடிப்படை விலை 4 லட்சம் அமெரிக்க டாலர்கள். ரிச்சர்ட் மேட்லி தோனியின் பெயரை சொன்ன அடுத்த நொடியில் அத்தனை அணிகளும் கோதாவில் குதித்தன. ரிச்சர்ட் மேட்லி சொன்ன ஐ.பி.எல் இன் முதல் ஏலப் போர் தொடங்கியது. தோனியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கிட்டத்தட்ட 9 லட்சம் டாலர்களை எட்டிய சமயத்தில் மற்ற அணிகள் ஒதுங்கிக் கொள்ள தொடங்கின. மும்பையின் ரிலையன்ஸ் நிறுவனமும் சென்னையின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் மட்டுமே போட்டியில் நீடித்தன. மும்பை அணி தோனியின் விலையை 1 மில்லியன் டாலராக உயர்த்திவிட்டது. ஏல அரங்கம் மொத்தமும் வியப்பில் ஆழ்ந்தது. ஏனெனில், 1 மில்லியன் டாலரெனில் அப்போதைக்கு இந்திய மதிப்பில் தோராயமாக 4 கோடி ரூபாய். இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு இது மிகப்பெரிய தொகைதான்.
ஏனெனில், 2008 இல் பிசிசிஐயின் வருடாந்திரா ஒப்பந்தப்படி க்ரேட் A வில் தோனி இருந்தார். அதுதான் உச்சபட்ச க்ரேட். அப்போது அந்த க்ரேடில் இருப்பவர்களுக்கு வருட சம்பளம் எவ்வளவு தெரியுமா? 60 லட்ச ரூபாய்தான். ஏல அரங்கில் உண்டான வியப்புக்கான காரணம் புரிகிறதா?
ஏலம் அத்தோடு நிற்கவில்லை. இரண்டு அணிகளும் மாறி மாறி சண்டையிட்டு 1.3 மில்லியன் டாலர் வரை வந்துவிடுகிறார்கள். இதற்கு மேல் முடியாது என்பது போல் சென்னை முகாமில் முகபாவனைகளும் உடல்மொழியும் தெரிகிறது. இன்னும் ஒரே ஒரு கை தூக்கலில் தோனியை தனதாக்கிக் கொள்ளலாம் என மும்பை நினைத்தது. மீண்டும் கையை தூக்கியது. ஆனால், சென்னை அணி எதிர்பார்த்தபடிக்கு பின் வாங்கவில்லை. அவர்களும் கைதூக்கினார்கள். தோனியின் விலை 1.5 மில்லியன் டாலரை எட்டியது. மும்பை அணியால் இதற்கு மேல் விலையை ஏற்ற முடியாது என்பது சென்னை அணிக்கு தெரிந்திருந்தது. ஏனெனில் தோனியை 1.5 மில்லியனுக்கு மேல் கொடுத்து வாங்கினால் அதைவிட 15% தொகை அதிகமாக வைத்து சச்சினுக்கு ஊதியமாக கொடுக்க வேண்டும். இருக்கிற 5 மில்லியன் டாலரில் 3 மில்லியனை இரண்டே வீரர்களுக்கு கொடுத்துவிட்டால் எப்படி ஒரு அணியை கட்டமைக்க முடியும்? சென்னை அணிக்கு இந்த தலைவலியே இல்லை. ஏனெனில், அவர்கள் 'Iconic' வீரரென யாரையும் ஒப்பந்தம் செய்திருக்கவில்லை. விளைவு, மும்பை அணி தோனிக்கான ஏல ரேஸிலிருந்து பின் வாங்கியது. சுத்தியலை ஓங்கி அடித்து தோனி சென்னை அணிக்கு விற்கப்பட்டதை உறுதி செய்தார் ரிச்சர்ட் மேட்லி.
ஒரு மாபெரும் வெற்றிக் கூட்டணிக்கான விதை அங்கேதான் தூவப்பட்டது. சென்னைதான் என்னுடைய இரண்டாவது சொந்த ஊர் என சொல்லுமளவுக்கு தோனியை சென்னையோடு பிணைக்க காரணமாக இருந்தது அந்த சம்பவம்தான். தோனியை சென்னை அணி அவ்வளவு பெரிய தொகைக்கு எடுத்த போது 'இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் பெரிய ரிஸ்க்கை எடுத்திருக்கிறது. கிரிக்கெட் தனிநபர் ஆட்டமல்ல. குழு ஆட்டம். இங்கே ஒரு வீரருக்கு இவ்வளவு தொகையை முதலீடு செய்கிறார்கள். அவர் சொதப்பினால் என்ன செய்வார்கள்?' என மற்ற அணியின் உரிமையாளர்கள் வெளிப்படையாகவே வயிற்றெரிச்சலை கொட்டினார்கள்.
ஆனால், சென்னை அணி தோனியை நம்பியது. தோனி சென்னை அணியை நம்பினார். விமர்சனங்கள் தவிடுபொடியாகும் அளவுக்கு 5 கோப்பைகளை சென்னை அணிக்காக தோனி வென்று கொடுத்திருக்கிறார். சென்னை அணியின் முகம் என்பதைக் கடந்து ஐ.பி.எல் இன் முகமாக தோனி இன்றைக்கு மாறியிருக்கிறார். எல்லாவற்றுக்குமான தொடக்கப்புள்ளி பிப்ரவரி 20, 2008 என்கிற அந்த தேதிதான்.
அடுத்த பாகத்தில்'டெல்லியின் கோலியை பெங்களூருவுக்கு எப்படி கடத்தினார் மல்லையா?'
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...