நாகை - காங்கேசன்துறை இடையே டிச.18 வரை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
வாக்கு வங்கி அரசியலின் முன்னோடி காங்கிரஸ்: மோடி
வாக்கு வங்கி அரசியலின் முன்னோடி காங்கிரஸ் கட்சி என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏழை மக்களை ஏமாற்றும் செயலில் காங்கிரஸ் ஈடுபாடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிர மாநிலம் பன்வேல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது மேடையில் அவர் பேசியதாவது,
''ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்குவது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. ஆனால், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் ஊடுருவல்காரர்களுக்கும் இலவச எரிவாயு உருளைகளை (கேஸ் சிலிண்டர் ) வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ரோஹிங்கியாக்களுக்கும் வங்கதேசத்தினருக்கும் இலவச எரிவாயு உருளை வழங்குவதாக காங்கிரஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியினர், நாட்டையும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் எப்படி விளையாட்டாக பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ஏழைகளுக்கு எதிரி காங்கிரஸ்
இதன்மூலம், காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலின் முன்னோடி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், நாட்டில் உள்ள ஏழைகளுக்கு அவர்கள் எதிரி என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
வருவோருக்கு இலவசங்களைக் கொடுப்பதன்மூலம், இங்குள்ள மக்களின் செலவுகளை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என்பதை காங்கிரஸ் விரும்புகிறது.
மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு வாய்ப்பு கொடுத்தாலும் இதேதான் நடக்கும். மகாராஷ்டிரத்தில் அவர்கள் (காங்கிரஸ் கூட்டணி) இதையேதான் செய்வார்கள்.
ஏழை மக்கள் தங்கள் உரிமைகளை முழுமையாகப் பெற வேண்டும் என காங்கிரஸ் நினைக்கவில்லை.
அதனால்தான் ஏழை மக்களுக்கான கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களையும் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. இதனால், ஏழை மகன் கடினமான சூழலில் இருந்து வெளியே வர முடியவில்லை.
சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, நாட்டில் ஏராளமான மக்கள் உணவு, உடை மற்றும் இருப்பிடத்துக்காக போராடுகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் இன்று மகாயுதி அரசின் கொள்கைகள் சுரண்டப்படுவோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் பலமாக மாறி வருகிறது. 10 ஆண்டுகளில் பாஜக செய்த வேலைகளை அவர்கள் முன்னரே செய்திருக்கலாம்'' என பிரதமர் மோடி பேசினார்.
இதையும் படிக்க | அரசியலமைப்புச் சட்டத்தைப் படிக்காதவர் பிரதமர் மோடி: ராகுல்