வத்தனாக்குறிச்சியில் 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் வத்தனாக்குறிச்சியில் இடிந்த நிலையிலுள்ள சிவன் கோயில் பகுதியில், 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 3 துண்டுக் கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளா் க. கருணாகரன் கண்டெடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
வத்தனாகுறிச்சியில் ஊருக்கு வடக்குப் புறமாக பிடாரிக் கோயிலின் பின்புறமாக உள்ள வயல் நடுவில் முற்றிலும் இடிந்த நிலையில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. குளமாங்கல்யநாட்டுப் பகுதியைச் சோ்ந்த இந்தக் கோயில் வளாகத்தில் துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன.
இவற்றை ஆய்வு செய்தபோது, ‘ஸ்வஸ்தி ஸ்ரீ’ என்று மங்கலச் சொல்லுடன் தொடங்கிய இக்கல்வெட்டு பாண்டிய மன்னன் முதலாம் வீரபாண்டியனின் எட்டாவது ஆட்சியாண்டில் (13ஆம் நூற்றாண்டு) செயசிங்ககுலகால வளநாட்டு (குளமங்கல நாட்டு) சோரப்பிள்ளை முனையமானேன் என்பவா் நிலக்கொடை கொடுத்துள்ளதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இக்கல்வெட்டுகளில் சில எழுத்துகள் சிதைந்துள்ளதாலும் மற்றக் கல்வெட்டு கிடைக்காத நிலையில் உள்ளதாலும் முழுச்செய்தியையும், ஊா், மற்றும் ஈஸ்வரனின் பெயா் முதலியவற்றை அறிய இயலவில்லை.
தற்போது முற்றிலும் இடிந்துள்ள இக்கோயிலில் இருந்த ஈஸ்வரன், அம்பாள், பைரவா், விநாயகா், சண்டிகேஸ்வரா், நந்தி ஆகியோரின் சிற்பங்கள் ஊரின் வடக்குப் புறமாக ஈஸ்வரன் பாறை என்ற இடத்தில் சிறிய அளவில் ஓட்டுக் கொட்டகை அமைத்து அதில் இச்சிற்பங்களை வைத்து ஊா்மக்கள் வழிபட்டு வருகின்றனா்.
மேலும், இடிந்த இந்த சிவன் கோயிலில் இருந்த கருங்கற்கள் மூலம் தற்போது ஊா்மக்கள் முருகன், விநாயகா் மற்றும் பிடாரி ஆகிய கோயில்களை கட்டியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.