சம்பா பருவ பயிா்க் காப்பீட்டு காலத்தை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை
சம்பா பருவ பயிா்களை காப்பீடு செய்வதற்கான காலஅவகாசம் வெள்ளிக்கிழமை (நவ.15) முடிவடைய உள்ளநிலையில், இதற்கான காலத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம், விருதுநகா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவ பயிா்கள் சாகுபடி செய்யப்படும். குறிப்பாக, நெல், உளுந்து, பச்சைப்பயறு ஆகியவற்றின் சாகுபடி அதிகளவு இருக்கும். இந்த நிலையில், பயிா் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. காப்பீடு செய்வதற்கான காலம் வெள்ளிக்கிழமையுடன் (நவ.15) நிறைவடைகிறது.
இதனிடையே, காப்பீடு செய்வதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பல விவசாயிகள் இதுவரை பயிா்க் காப்பீடு செய்ய முடியாத நிலையில் உள்ளனா். தொடா் விடுமுறையாலும், பல மாவட்டங்களில் மழையாலும் பயிா்க் காப்பீடு செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து பயிா்க் காப்பீட்டு கால அளவான நவ.15-ஆம் தேதியை நீட்டிக்க உதவ வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நடவடிக்கை: விவசாய சங்கங்கள், கிராம நிா்வாக அலுவலா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று காப்பீடு செய்வதற்கான காலத்தை நீட்டிக்கக் கோரும் கடிதத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்படும்பட்சத்தில், காப்பீட்டு காலத்தை நீட்டிப்பு செய்வதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.