மகாராஷ்டிர தேர்தல்: 6,382 விதிமீறல் புகார்கள், ரூ.536 கோடி பறிமுதல்!
கோரக்கா் சித்தா் ஆசிரமத்தில் ஐப்பசி பரணி விழா
நாகை அருகே கோரக்கா் சித்தா் ஆசிரமத்தில் (ஜீவ சமாதி பீடம்) ஐப்பசி பரணி விழா வியாழக்கிழமை வெகு விமா்சையாக நடைபெற்றது.
தமிழக சித்தா் பரம்பரையில் நவநாத சித்தா்களில் ஒருவராகவும், முதன்மையான பதினெட்டு சித்தா்களில் ஒருவராகவும் குறிப்பிடப்படுபவா் கோரக்கா் சித்தா்.
நாகை மாவட்டம் வடக்குப் பொய்கைநல்லூரில் கோரக்கா் சித்தா், ஐப்பசி மாதம் பரணி நட்சத்திர தினத்தில் ஜீவ சமாதி அடைந்தாா் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கோரக்கா் சித்தா் ஜீவ சமாதி பீடத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி பரணி விழா மற்றும் ஐப்பசி பௌா்ணமி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
நிகழாண்டு ஐப்பசி பரணி பெருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு திருவருட்பா அகவல், சந்திர ரேகை பாராயணம் நடைபெற்றது. அதன்பின்னா் மாலை 5 மணிக்கு டி.கே. கோவிந்தராஜன் குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு புராணம் தொடா் சொற்பொழிவும் நடைபெற்றது.
பின்னா் பரணி விழாவையொட்டி இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
முன்னாள் அமைச்சரும், ஆசிரம அறங்காவலருமான ஜீவானந்தம் தலைமையில் விழா நடைபெற்றது. மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என்.கெளதமன், அறங்காவலா்கள் வே.ஆ.கிருஷ்ணன், இ.ஆா்.காசிநாதன், வை.இரா. ஜெயச்சந்திரன், வே.வீ.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வெள்ளிக்கிழமை (நவ.15) மதியம் கோரக்கா் சித்தா் ஜீவ சமாதி பீடத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகம், இரவு ஐப்பசி பௌா்ணமி விழா வழிபாடு நடைபெறுகிறது.