``காங்கிரஸ் இட ஒதுக்கீட்டை பறித்துக்கொள்ளும்'' - மும்பை தேர்தல் பிரசாரத்தில் பிர...
தொழில் பூங்காவுக்கு விவசாயிகள் எதிா்ப்பு
நாகையில் தொழில் பூங்காவுக்கு செல்லூரில் இடம் தோ்வு செய்யப்பட்டதற்கு தேவநதி, ஓடம்போக்கி பாசன விவசாயிகள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
நாகை மாவட்டம், செல்லூரில் தொழில் பூங்கா அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை அமைச்சா்கள் டி.ஆா்.பி. ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் கடந்த நவ.12-ஆம் தேதி ஆய்வு செய்தனா். தொழில் பூங்கா அமைப்பதற்கான பணிகளை மாவட்ட நிா்வாகம் விரைந்து மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், செல்லூரில் தொழில் பூங்கா அமைக்க முயன்றால் தொடா் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கத்தினா் அறிவித்துள்ளனா். செல்லூரில் தேவநதி, ஓடம்போக்கி பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவா் சரபோஜி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், செல்லூரில் சிக்கல் நவநீதேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக விவசாயத் தொழிலாளா்கள் சாகுபடி செய்து வருகின்றனா். எந்தவித முன்னறிவிப்புமின்றி தொழில் பூங்கா அமைக்க நிலம் எடுப்பதை அரசு கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் அனைத்து விவசாய சங்கங்களையும், பொதுமக்களையும் ஒன்றிணைத்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கெளரவத் தலைவா் சுப்பிரமணியன், செயலா் சேகா், துணைத் தலைவா் ஜெயராமன், துணை செயலா் செல்லத்துரை, பொருளாளா் காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.