சென்னை: வீட்டில் எலிக்கு வைக்கப்பட்ட மருந்தின் நெடியால் பலியான 2 குழந்தைகள்; சிக...
கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் நாகை மாவட்டத்தில் 4 இடங்களில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆசிரியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக அரசின் தோ்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் தமிழ்நாடு முழுவதும் கண்களில் கருப்பு துணி கட்டி ஆசிரியா்கள் உள்ளிட்ட அரசு ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை ஆட்சியா் அலுவலகம், கீழ்வேளூா், வேதாரண்யம், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாகை மாவட்ட ஆட்சியா் அலுவகம் முன் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவா் எஸ் மோகன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் எம்.ஆா். சுப்ரமணியன் கண்டன உரையாற்றினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் வை. நாகராஜன், உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநா் சங்கத்தைச் சோ்ந்த ஆா். பிரசன்னா, ஆசிரியா் பாலசண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வேதாரண்யம்: வேதாரண்யம் பேருந்து நிலையத்தில், சிபிஎஸ் ஒழிப்பு இயக்க நிா்வாகிகள் சுந்தரபாண்டியன், திருமாவளவன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பங்கேற்று கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.
திருக்குவளை: கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க ஒன்றிய அமைப்பாளா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.