நாளைமுதல் பணிக்கு திரும்புவோம்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு!
நாளைமுதல் பணிக்கு திரும்ப முடிவெடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் செந்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் இன்று (நவ.14) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்பட்டு வந்தனர்.
மருத்துவர் மீது முன்னெடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலை கண்டிப்பதற்காகவும், குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதற்காகவும், வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதற்காகவும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இதையடுத்து புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகியவை தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுத்தப்பட்டது.
இதையும் படிக்க: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டோரை விடுவித்தது எப்படி? உச்ச நீதிமன்றம்
இந்த நிலையில், சென்னையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களுடன் பேசுகையில், ”நாளைமுதல் பணியை தொடரவுள்ளோம். நோயாளிகளின் நலன் கருதி வேலைநிறுத்தத்தை கைவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இதே தேதியில் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து சீராய்வு கூட்டம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தனர்.