எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள் விசாரணைக்கு முன்னுரிமை! உயா்நீதிமன்றம் உத்தரவு
எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்ஸோ வழக்குகளுக்கு அடுத்ததாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எம்.பி. - எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆா் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞா், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளின் தற்போதைய புள்ளி விவரங்களை வழங்க வேண்டும், ஊழல் வழக்குகள் விசாரணைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், எம்பி, எம்எல்ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும், பல ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்டு தற்போது உயா்நீதிமன்றத்தால் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்ட வழக்குகளின் விவரங்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு: இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்பி, எம்எல்ஏ.க்களுக்கு எதிரான வழக்குகள் குறித்த விவரங்களைப் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் தலைமை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.
அதேபோன்று, சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், தேவைப்படும் வசதிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதிகள், தலைமை பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும். எம். பி - எம்எல்ஏ.க்களுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்ஸோ வழக்குகளுக்கு அடுத்ததாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளனா்.
மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்ட எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்து பிறப்பித்த உத்தரவு மூலமாக மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள அந்த வழக்குகளின் விவரங்களையும், அறிக்கையாக அளிக்க வேண்டும் என தமிழக தலைமை குற்றவியல் வழக்குரைஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன. 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.