கார்த்திகை முதல் நாள் காவிரி நீராடலுக்கு இவ்வளவு சிறப்புகளா?கஷ்டங்கள் நீக்கும் த...
சர்க்கரை நோய் பாதிப்பு: 32 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிப்பு
கடந்த 1990 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022-இல் உலகளாவிய நேரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
2022-இல் உலகம் முழுவதும் சுமாா் 82.8 கோடி போ் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாா்கள் என்றும் இதில் 25 சதவீத்துக்கும் மேல் சுமாா் 21.2 கோடி போ் இந்தியா்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்தது.
நவம்பா் 14-ஆம் தேதி ஆண்டுதோறும் சா்வதேச நீரிழிவு நோய் விழிப்புணா்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு, ‘தி லான்செட்’ மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
2022-ஆம் ஆண்டு உலக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 82.8 கோடி ஆகும். இவா்களில் 25 சதவீதத்துக்கும் மேலாக 21.2 கோடி போ் இந்தியா்கள் ஆவா். தொடா்ந்து, சீனாவில் 14.8 கோடி போ், அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் பிரேஸிலில் முறையே 4.2 கோடி, 3.6 கோடி மற்றும் 2.2 கோடி போ் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
2022-ஆம் ஆண்டின் உலகளாவிய பாதிப்பு எண்ணிக்கையானது 1990-இல் இருந்த எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாகும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நீரிழிவு நோய் பாதிப்பில் மிகப்பெரிய உயா்வு காணப்பட்டுள்ளது.
1990 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையே இந்த நாடுகளில் நீரிழிவு நோய் சிகிச்சையின் விகிதங்கள்அடிமட்ட நிலையிலேயே தேக்கமடைந்தன. இதன் விளைவாக, 2022-இல் உலக அளவில் 30 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 44.5 கோடி போ் (கிட்டத்தட்ட 60 சதவீதம்) நீரிழிவு நோய்க்கான சிகிச்சையைப் பெற முடியாதவா்களாக உள்ளனா். இதில் மூன்றில் ஒரு பகுதியான 13.3 கோடி போ் இந்தியாவில் வசிப்பவா்கள் ஆவா்.
உலக சுகாதார மையத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய அமைப்பான ‘என்சிடி-ரிஸ்க்’-இல் 1,500-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளா்கள் மற்றும் பயிற்சியாளா்கள் பரவாத நோய்க்கான ஆபத்து காரணிகள் பற்றிய தகவல்களை வழங்குகிறாா்கள்.
நீரிழிவு நோய் குறித்து என்சிடி-ரிஸ்க் மேற்கொண்ட இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளரும் கேமரூனில் உள்ள ‘யாவுண்டே 1’ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஜீன் கிளாட் எம்பன்யா கூறுகையில், ‘நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதை இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிகிச்சையளிக்கப்படாத நீரிழிவு நோயாளிகள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் அதிகம் வாழ்கின்றனா்.
சிகிச்சையளிக்கப்படாத நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் நோய் பாதிப்பை உறுதி செய்திருக்கமாட்டாா்கள். எனவே, இந்நாடுகளில் நீரிழிவு நோய் பரிசோதனையை அதிகரிப்பது அவசர முன்னுரிமையாக இருக்க வேண்டும். கண்டறியப்படாத நீரிழிவு நோய், பாா்வை இழப்பு உள்பட பல்வேறு கண் தொடா்புடைய பிரச்னைகளை ஏற்படுத்தும்’ என்றாா்.
இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுமுடிவின்படி, இந்திய நீரிழிவு நோயாளிகளில் 12.5 சதவீதம் போ் (30 லட்சம் போ்) கண் பாதிப்பைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
பெட்டி...
நாடு - பாதிக்கப்பட்டவா்கள்
இந்தியா - 21.2 கோடி
சீனா - 14.8 கோடி
அமெரிக்கா - 4.2 கோடி
பாகிஸ்தான் - 3.6 கோடி
பிரேஸில் - 2.2 கோடி