வாட்ஸ்ஆப்-க்கு தடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
மத்திய அரசின் விதிமுறைகளுக்கு இணங்க மறுப்பதால், இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடா்பாக, கேரளத்தைச் சோ்ந்த கே.ஜி.ஓமனகுட்டன் என்ற மென்பொருள் பொறியாளா் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘கடந்த 2021-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப (சமூக ஊடகங்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் எண்ம ஊடக ஒழுங்குமுறை) விதிகளுக்கு இணங்க வாட்ஸ்ஆப் நிறுவனம் மறுக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின்கீழ் குடிமக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதோடு, தேச நலன்-பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக வாட்ஸ்ஆப் உருவெடுத்துள்ளது.
அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப தனது தொழில்நுட்பத்தை மாற்றிக் கொள்ள விரும்பாத பட்சத்தில், இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவைகள் தொடர அனுமதிக்கக் கூடாது’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டு, நீதிபதிகள் அதை தள்ளுபடி செய்தனா்.