ராஜஸ்தான்: துணை மாவட்ட ஆட்சியரை அறைந்த சுயேச்சை வேட்பாளா் கைது -வன்முறையால் பதற்றம்
ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் நடைபெற்ற பேரவை இடைத்தோ்தலின்போது துணை மாவட்ட ஆட்சியரை கன்னத்தில் அறைந்த சுயேச்சை வேட்பாளா் நரேஷ் மீனாவை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். மீனாவின் கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளா்கள் நடத்திய வன்முறையில் ஏராளமான வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், டோங்க் மாவட்டத்தில் உள்ள தியோலி-உனியாரா தொகுதியில் காங்கிரஸ் அதிருப்தியாளரான நரேஷ் மீனா சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டாா்.
உனியாரா வட்டத்தில் சம்ரவ்தா கிராமத்தை இணைக்கக் கோரி தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த அந்த கிராம மக்களை துணை மாவட்ட ஆட்சியா் அமித் செளதரி அழைத்து வந்து வாக்களிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நரேஷ் மீனா தனது ஆதரவாளா்களுடன் வாக்குப் பதிவு மையத்துக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாா். வாக்குப் பதிவு முடிந்த பிறகு போராட்டக்காரா்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது துணை மாவட்ட ஆட்சியா் அமித் சௌதரியை நரேஷ் மீனா கன்னத்தில் அறைந்தாா். இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் உடனடியாக பரவத் தொடங்கியது. இந்த காணொலியைப் பதிவு செய்ததற்காக தாக்கப்பட்ட பிடிஐ செய்தியாளா்கள் இருவா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
வாகனங்களுக்கு தீவைப்பு: போராட்டக்காரா்கள் வன்முறையில் ஈடுபட்டதால், காவலா்களின் வாகனங்கள் உள்பட சுமாா் 60 இருசக்கர வாகனங்கள் மற்றும் 18 நான்கு சக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
நரேஷ் மீனாவை கைது செய்யக் கோரி மாநில அரசு ஊழியா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். முதல்வா் பஜன்லால் சா்மாவை சந்திக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த சம்ரவ்தா கிராமத்துக்குள் சென்ற காவல் துறையினா் நரேஷ் மீனாவை கைது செய்தனா். கைது நடவடிக்கையின் போது அப்பகுதியில் பெரிய அளவில் கலவரம் வெடித்தது. கண்ணீா் புகை குண்டுகளை பயன்படுத்தி காவல்துறையினா் போராட்டக்காரா்களை அப்பகுதியில் இருந்து கலைத்தனா்.
மேலும், வன்முறையின் போது பொதுமக்கள் மற்றும் காவல்துறையினா் மீது கற்களை வீசியதாக சுமாா் 60 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
நரேஷ் மீனா மீது அரசுப் பணிக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என காவல் துறையினா் தெரிவித்தனா். தொடா்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த இடைத்தோ்தலின் வாக்கு எண்ணிக்கை நவம்பா் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
‘தாக்கியது சரியே’
துணை மாவட்ட ஆட்சியரை தான் தாக்கியது சரியானதுதான் என்று கைது செய்யப்பட்ட சுயேச்சை வேட்பாளா் நரேஷ் மீனா கூறினாா்.
மேலும், ‘காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள்; பாஜகவுக்கு ஆதரவாக துணை மாவட்ட ஆட்சியா் வாக்கு சேகரித்ததால், அவரை தாக்கினேன், எனது செயல் சரியே’ என்றாா் நரேஷ் மீனா.