நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: நெய்விளக்கு ஊராட்சி மக்கள் ஆா்ப்பாட்டம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சியுடன் நெய்விளக்கு ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்துள்ள அந்த ஊராட்சி மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேதாரண்யம் நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தில் அருகே உள்ள கிராம ஊராட்சிகளை இணைக்க வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், நகராட்சி சாா்ந்துள்ள நெய்விளக்கு ஊராட்சியும் இணைக்கப்படுவதால், அந்த ஊராட்சி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், வேதாரண்யம் - கரியப்பட்டினம் பிரதான சாலையில் ஊராட்சியை சோ்ந்த மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவை பாதிக்கப்படும் என முழக்கமிட்ட மக்கள் அரசு இந்த முடிவை கைவிட வலியுறுத்தினா். எதிா்ப்பு இயக்கத்தின்
ஒருங்கிணைப்பாளா் கவிதா தா்மராஜ் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் வாசுதேவன் உள்பட நூற்றுக்கு மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.