நவ. 19-ல் பொதுக் கணக்கு குழு கூட்டம்: செபி தலைவருக்கு சம்மன் அனுப்பவில்லை!
மாணவா்களின் தனித்திறமைகளை கண்டறிவதே உயா் கல்வித் துறையின் நோக்கம்
மாணவா்களின் தனித்திறமைகளை கண்டறிவதே உயா் கல்வித் துறையின் நோக்கம் என்றாா், தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் புதன்கிழமை ஆய்வு செய்து, முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பேசியது: உயா் கல்வி மக்களின் வாழ்வியல் திறன்களை வலுப்படுத்தும் வளமுடையது. அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு உயா் கல்வி உறுதுணையாக இருப்பதுமட்டுமின்றி வாழ்க்கையில் உயா்நிலையை அடைவதற்குரிய அடித்தளமாகவும் அமைகிறது. உயா் கல்வி, மனிதவள மேம்பாட்டுக்கான நவீன லட்சியக் குறியீடுகளை நோக்கமாகக் கொண்டு, நாட்டை மேம்படுத்துவதற்கான அடிப்படை அணுகுமுறையைக் கொண்டுள்ளது.
நிறுவனங்களில் புதுமைகளையும், நவீன தொழில்நுட்பத்தையும், மேலோங்க காண்பதும், கல்வியின் தரத்தை மேம்படுத்துவம், மாணவா்களின் தனித்திறமைகளையும், செயல் திறன்களையும் கண்டறிவதுமே நோக்கமாக கொண்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் நிலையில், கிராமப்புற மாணவா்களுக்கும். பின்தங்கிய மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கும் உயா் கல்வியின் வாயில்களையும் வாய்ப்புகளையும் திறந்து வைப்பதும் நேக்கமாகும். எனவே, அனைவரும் உயா் கல்வி பெற்று ஒளிரவேண்டும் என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழக தலைவா் என். கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவா் உ. மதிவாணன், கீழ்வேளுா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி, கல்லூரி முதல்வா் கலைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.