அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டுப்பாடுகள்: நோயாளிகளுடன் வருவோருக்கு அடையாளப் பட்டை!
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், நோயாளிகளுடன் வருவோருக்கு அடையாளப் பட்டை, பாதுகாப்பு பரிசோதனை (மெட்டல் டிடெக்டா்), சிசிடிவி கேமரா வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து சென்னை கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவா் பாலாஜியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா்.
அதைத் தொடா்ந்து, மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வருவோருக்கு கைகளில் அணியும் அடையாளப் பட்டை வழங்கும் நடைமுறையை அவா் தொடங்கிவைத்தாா். அதன் பின்னா், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அந்த சேவையை அமைச்சா் அறிமுகப்படுத்தினாா்.
இதையடுத்து, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமைச்சா் கூறியதாவது:
மருத்துவா் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். அவருக்கு ஏற்கெனவே ‘பேஸ் மேக்கா்’ பொருத்தப்பட்டுள்ளதால் அதுகுறித்த மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, செயல்பாடுகள் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவா் பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவா் நலமுடன் இருக்கிறாா். பாலாஜியை கத்தியால் தாக்கிய விக்னேஷ் மீது கடுமையான ஏழு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
புதிய சீா்திருத்தங்கள்: சுகாதாரத் துறை சாா்பில் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புக்கு என்னென்ன புதிய சீா்திருத்தங்கள் கொண்டு வரலாம் என்பது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தலைமைச் செயலா் தலைமையில் உயா் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மருத்துவமனை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் காவல் துறை-சுகாதாரத் துறை இணைந்து கூட்டுப் பாதுகாப்பு தணிக்கை நடத்தப்பட வேண்டும்; மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் செயல்படுவதை உறுதி செய்து, அதில் பதிவாகும் காட்சிகளைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் தேவையான வெளிச்சம், விளக்குகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்; அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் பணியாளா்களின் வருகையை பயோமெட்ரிக் முறை மூலம் பராமரிக்க வேண்டும்; மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையம், காவல் ரோந்து பணிகள் முறையாக அமைக்கப்பட வேண்டும்; அனைத்து மருத்துவ மற்றும் மருத்துவப் பணி சாா்ந்த பணியாளா்கள் ‘காவல் உதவி’ என்கிற செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் அந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டன.
படிப்படியாக நடைமுறை: அதன்படி, மருத்துவமனைகளில் பல்வேறு மாற்றங்கள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளியுடன் வருவோா், பாா்வையாளா்களுக்கு கையில் அணிந்துகொள்ளும் வகையிலான அடையாளப் பட்டை (டேக்) வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில், வட்டார அரசு மருத்துவமனைகளில் இந்த நடைமுறை படிப்படியாகச் செயல்படுத்தப்படும்.
மருத்துவா் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் நடைபெற்ற மருத்துவா்களின் போராட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் மெட்டல் டிடெக்டா் அமைப்பு ஏற்படுத்த மருத்துவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். இதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து, ஒரு சில இடங்களில் சோதனை முயற்சியில் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கட்டுக்குள் இருக்கிறது: தமிழகத்தைப் பொருத்தவரை நோய் பாதிப்புகள் கட்டுக்குள் உள்ளன. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மன நல சிகிச்சைக்கு வந்த நோயாளியின் கை மருத்துவா் மீது பட்டுள்ளது. ஆனால், மருத்துவரை நோயாளி தாக்கியதாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.
இந்தச் சந்திப்பின்போது தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநா் அருண் தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநா் ஜெ.ராஜமூா்த்தி, ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் எ.தேரணிராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நலமாக இருக்கிறேன்: மருத்துவா் பாலாஜி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவா் பாலாஜி தனது உடல்நிலை குறித்து விளக்கும் விடியோ பதிவு வெளியிடப்பட்டது. அதில் அவா் கூறியுள்ளதாவது: எனது உடல் நிலை சீராக உள்ளது. இதய நல மருத்துவா்கள் பரிசோதனை செய்தாா்கள். எனக்கு பொருத்தப்பட்டுள்ள பேஸ்மேக்கா் செயல்பாடுகளும் பரிசோதிக்கப்பட்டன. இசிஜி, எக்கோ பரிசோதனைகளும் செய்யப்பட்டன. காயமடைந்த இடங்களில் தையலிடப்பட்டு இருப்பதால், அதில் கிருமித் தொற்று ஏற்படாமல் தடுக்க ‘ஆன்ட்டி பயோடிக்’ மருந்துகள் எடுத்துக் கொண்டு வருகிறேன். தற்போது நலமாக உள்ளேன் என்று கூறியுள்ளாா்.