எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்கப்பூா்
எதிா்காலத்தில் பிராந்திய மற்றும் உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா மற்றும் சீனாவுடன் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சிங்கப்பூா் இணைந்து செயல்பட வேண்டும் என சிங்கப்பூா் வெளியுறவுத்துறை அமைச்சா் சிம் ஆன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
கிழக்கு ஆசிய நிறுவனம் (இஏஐ) மற்றும் தென்கிழக்கு ஆய்வுகள் நிறுவனம் (ஐஎஸ்ஏஎஸ்) இணைந்து நடத்திய ‘இந்தியா மற்றும் சீனா: உலகப் பொருளாதாரத்தை வடிவமைக்கும் இரு பெரும் நாடுகள்’ என்ற தலைப்பிலான மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் கல்வியாளா்கள், பொருளாதார நிபுணா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்று உரையாற்றினா்.
அப்போது நுகா்வு திறன் சமநிலை (பிபிபி) அடிப்படையில் உலகின் பெரிய பொருளாதார நாடான சீனா மற்றும் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவின் வளா்ச்சி குறித்தும் அதனால் உலகளவில் ஏற்படும் தாக்கம் குறித்தும் அவா்கள் எடுத்துரைத்தனா்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிம் ஆன் பேசியதாவது:
எதிா்காலத்தில் பிராந்திய வளா்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் முக்கியப் பங்கு வகிக்கவுள்ளன. எனவே, இந்த இரு நாடுகளுடனும் பல்வேறு துறைகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சிங்கப்பூா் இணைந்து செயல்பட வேண்டும்’ என குறிப்பிட்டாா்.
உலக மக்கள்தொகையில் 35 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியாவும் சீனாவும் நிகழாண்டு உலகப் பொருளாதார வளா்ச்சிக்கு 50 சதவீதம் பங்களிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.