TNEB: ஊழல் குற்றச்சாட்டு; ``அதானிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை" -அமைச்சர் செந்தில் பாலாஜி
கௌதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு..
சோலார் எனர்ஜி திட்ட ஒப்பந்த விவகாரத்தில் முதலீட்டைப் பெற அமெரிக்க முதலீட்டாளர்களை பொய் சொல்லி ஏமாற்றியதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் கௌதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அமெரிக்க நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ``அமெரிக்க முதலீட்டாளர்களின் முலதனத்தைப் (Investment) பெறுவதற்காக பொய் சொல்லி, சதித்திட்டம் தீட்டி, இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக வாக்குறுதியளித்திருக்கிறார்.
அதன் மூலம், தமிழ்நாடு, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் மின்சார விநியோக நிறுவனங்கள், மத்திய அரசின் சூரிய ஆற்றல் கழகத்துடன் (SECI - Solar Energy Corporation of India) பி.எஸ்.ஏ ஒப்பந்தத்தில் (POWER SALE AGREEMENT - FOR SALE OF SOLAR POWER) கையெழுத்திட்டு இணைக்கப்பட்டிருக்கின்றன. லஞ்சம் கொடுத்து பெற்ற ஒப்பந்தங்களை வைத்து, அமெரிக்க முதலீட்டார்களை அதானி நிறுவனம் ஏமாற்றியிருக்கிறது." எனக் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக விசாரித்த நீதிமன்றம், அதானிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறது. இந்த நிலையில், அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இருக்கும் தொடர்பு குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்...
இந்நிலையில், கரூர் மாநகராட்சி சார்பில் காமராஜர் மார்க்கெட்டில் புதிதாக வணிக வளாக கட்டுமான பணிகளை தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"கடந்த மூன்று ஆண்டுகளாக, அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை. சமூக ஊடகங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், அதானி நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருவதால், செய்தி நிறுவனங்கள் மின்சாரத்துறை அமைச்சராகிய என்னையோ அல்லது அதிகாரிகளையோ தொடர்பு கொண்டு எந்த நேரமும் விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், தமிழ்நாடு மின்சாரத்துறை தமிழக மின்வாரியத்தின் தேவையை கருத்தில் கொண்டு மின் பற்றாக்குறையை போக்குவதற்கு மத்திய அரசின் மின்சார வாரியத்தின் மூலம் சுமார் 1500 மெகா வாட் மின்சாரம் பெறுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் 7.01 பைசா என்ற விலை விகிதத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. தற்பொழுது, 2.61 பைசா என்ற அளவில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இது மிக மிக குறைவாகும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலக்கரி மூலம் பெறப்படும் மின் தேவைக்கு போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது. மேலும், சோலார் மின் உற்பத்தி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோலார் எனர்ஜி என்ற மத்திய அரசின் மின் நிறுவனத்தின் மூலமே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்னகம் மூலம் பெறப்பட்ட புகார்களில் 71% புகார்கள் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளது.
கரூர் புதிய பேருந்து நிலைய பணி:
கரூரில் புதிய பேருந்து நிலைய பணிகள் எப்பொழுது துவங்கும் என கேட்கிறீர்கள். திருமாநிலையூரில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலைய பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும். நீதிமன்றத்தில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் கரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கு நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதேபோல், கோயம்பள்ளி, மூலப்பாளையம் மேம்பால கட்டுமான பணிகள் குறித்தும் கேட்கிறீர்கள். கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இத்திட்டத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டது. தற்பொழுது, திட்டத்திற்கான நிதி அளவு அதிகமாக தேவைப்படுவதால், அதனை குறைத்து கணக்கிட்டு விரைவில் இணைப்பு சாலைகள் அமைத்து பணிகள் துவங்கும்" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...