கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியிருப்பது நிர்வாக சீர்குலைவை ஏற்படு...
மகாராஷ்டிரா: `இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க..' - தேர்தல் தொடங்கிய நிலையில் பா.ஜ.கவில் சேர்ந்த வேட்பாளர்!
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் இன்று காலை தொடங்கி வாக்குபதிவு நடந்து வருகிறது. இத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பா.ஜ.க தேசிய செயலாளர் வினோத் தாவ்டே மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் கட்சி நிர்வாகிகளுடன் மும்பை நாலாசோபாரா ஹோட்டலில் தங்கி இருந்த போது போலீஸார் ரெய்டு நடத்தி 9 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் விரார், நாலாசோபாரா பகுதியில் பகுஜன் விகாஷ் அகாடி என்ற கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. அக்கட்சியின் தலைவர் ஹிதேந்திர தாக்குர் கொடுத்த புகாரின் பேரில்தான் வினோத் தாவ்டே மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
பகுஜன் விகாஷ் அகாடி சார்பாக தகானு தொகுதியில் சுரேஷ் பத்வி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். கடந்த 15 நாள்களாக அவர் தீவிர பிரசாரமும் செய்தார். பா.ஜ.கவின் வினோத் தாவ்டே ரூ.5 கோடியுடன் வந்து வாக்காளர்களை சந்திப்பதாக ஹிதேந்திர தாக்குர் புகார் செய்திருந்தார்.
இன்று திடீர் திருப்பமாக சுரேஷ் பத்வி பா.ஜ.கவில் சேர்ந்தார். அதோடு தகானு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வினோத் மேத்தாவிற்கு ஆதரவு கொடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சுரேஷ் கூறுகையில், "வாக்குகள் சிதறுவதை தவிர்க்கவே இம்முடிவை எடுத்தேன். பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் வளர்ச்சித்திட்டங்கள் விரைவு பெறவேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்தேன்''என்றார்.
இத்தொகுதியில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வினோத் நிகோலே எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தற்போது அவர் மீண்டும் மகாவிகாஷ் அகாடி சார்பாக போட்டியிடுகிறார். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க ஆரம்பித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஏற்கெனவே பா.ஜ.க கடந்த 2022ம் ஆண்டு சிவசேனாவை இரண்டாக உடைத்துதான் ஆட்சியை பிடித்தது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...