மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்!
Champions Trophy: ``இந்தியா பாகிஸ்தானில் விளையாடுவது பாஜக அரசின் கையில் இருக்கிறது" - அக்தர்
பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு 2008 முதல் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதைத் தவிர்த்துவரும் வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்தாண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கப் போவதில்லை என ஐ.சி.சி-யிடம் தெரிவித்துவிட்டது.
ஆனால், இந்திய அணி தங்கள் நாட்டுக்கு வந்து விளையாட வேண்டும் தொடர்ந்து விருப்பம் தெரிவித்துவரும் பாகிஸ்தான், பாதுகாப்பு விவகாரம் தங்கள் நாட்டு அரசிடம் பேசிவருவதாகக் கூறப்படுகிறது.
இந்த இடத்தில் கிரிக்கெட் என்ற எமோஷனைத் தாண்டி, ஐ.சி.சி தொடரை நடத்தும் நாட்டுக்கு அதனைச் சுற்றி நடைபெறும் பொருளாதாரம் மிக முக்கியமானது. கடந்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் நடந்தபோது, சுமார் 11,000 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியாவுக்குப் பொருளாதாரப் பலன் கிடைத்தது. இருப்பினும், ஐ.சி.சி-யில் செல்வாக்குமிக்க வாரியமாகத் திகழும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இத்தகைய முடிவால், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறுமா அல்லது இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் வேறு நாட்டில் நடத்தப்படுமா என்று கேள்வியெழுந்திருக்கிறது.
இந்த நிலையில், இந்திய அணி பாகிஸ்தான் வந்து விளையாடுவது பி.சி.சி.ஐ கையில் இல்லை என்றும், பாஜக அரசின் முடிவில்தான் அது இருப்பதாகவும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து பேசிய சோயிப் அக்தர், ``இந்த விஷயம் உண்மையில் அரசைப் பொறுத்தது. பி.சி.சி.ஐ-க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பா.ஜ.க அரசுதான் இதை முடிவுசெய்வார்கள். திரைக்குப் பின்னால் இதில் பேச்சு இருக்கும். போர்க் காலங்களில் கூட திரைக்குப் பின்னால் பேச்சு நடந்திருக்கிறது. நாம் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. மேலும், ஐ.சி.சி-க்கான ஸ்பான்சர்ஷிப்பில் 95- லிருந்து 98 சதவிகிதம் இந்தியாவிலிருந்து வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும்.
எனவே, தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவைப் பாகிஸ்தான் சமாதானப்படுத்தத் தவறினால் இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒன்று, 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்பான்சர்ஷிப் பாகிஸ்தானுக்கு வராமல், ஐ.சி.சி-க்கும், சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் நாட்டுக்கும் செல்லும். இன்னொன்று, இந்திய அணி இங்கு வந்து விளையாடினால் அது நன்றாக இருக்கும்.
உலகக் கோப்பை அல்லது சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய தொடர்களை நடத்த முடியாது என்ற முத்திரை பாகிஸ்தான் மீதிருக்கிறது. அதனால், இந்தத் தொடர் இங்கு நடந்தால் அடுத்தடுத்த பெரிய நிகழ்வுகளுக்கு அது ஒரு படியாக இருக்கும். இறுதி நிமிடம் வரை காத்திருங்கள். தற்போதைய நிலவரப்படி, இந்தியா பாகிஸ்தானுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன்." என்று கூறினார்.
மேலும், விராட் கோலி குறித்துப் பேசிய அக்தர், ``விராட் முதன்முறையாக பாகிஸ்தானில் விளையாட முயற்சிக்கிறார். விராட் இங்கு விளையாடுவதைப் பார்க்க பாகிஸ்தானும் ஆவலாக இருக்கிறது. பாகிஸ்தானில் அவர் சதம் அடிப்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அது அவ்வளவு நன்றாக இருக்கும். ஒருவேளை அவர் சதம் அடிக்காமல் சீக்கிரமாக அவுட்டானாலும், அவரைச் சுற்றியே மொத்த நிகழ்வும் இருக்கும்." என்றார்.