`பணக்காரர்கள் மட்டும்தான் டார்கெட்; ஏழைகளை துன்புறுத்தமாட்டேன்!' - திருடி சிக்கிய இளைஞர் பேச்சு
மும்பை போரிவலி பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சுக்ராம் என்பவர் தனது குடும்பத்தோடு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று இருந்தார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டு கதவை திறந்து உள்ளே இருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.29 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து வெளிநாட்டில் இருக்கும் சுக்ராமிற்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. திருட்டு நடந்த கட்டடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தனர். திருட்டு நடந்த தினத்தன்று அக்கட்டடத்திற்குள் கார் ஒன்று வந்து சென்று இருந்தது தெரியவந்தது. அக்காரில் இருந்த நபரின் புகைப்படத்தை மும்பை முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கொடுத்து விசாரித்து வந்தனர். அக்காரின் பதிவு எண்ணை கொடுத்து விசாரித்தபோது அது ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தது என்று தெரியவந்தது.
மும்பை பவாய் போலீஸார் போரிவலியில் திருட்டில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டனர். போரிவலி வீட்டில் திருடிய நபரை பவாய் போலீஸார் ஏற்கெனவே ஒருமுறை கைது செய்திருந்தனர். இதையடுத்து அந்த நபர் பெயர் முன்னா குரேஷி என்று தெரிய வந்தது. அந்த நபர் பயன்படுத்தும் மொபைல் நம்பரை அடையாளம் கண்டுபிடித்து அவரை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
குரேஷியின் கார் மும்பை அடல் சேது கடல் பாலம் வழியாக செல்வது தெரிய வந்தது. உடனே உஷாரடைந்த போலீஸார் நவிமும்பை காலாப்பூர் டோல்கேட்டில் அந்த காரை மடக்கி பிடித்தனர். குரேஷியிடம் விசாரித்த போது போரிவலி வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் பணக்காரர்கள் மற்றும் வி.ஐ.பி-க்கள் வீட்டில் மட்டும் திருடியது தெரிய வந்தது. சோட்டாராஜன் வீட்டில்கூட ஒரு கோடி ரூபாயை திருடியிருந்தார். மேலும் புனே, தெலங்கானா, ராஜஸ்தான், ஐதராபாத், மும்பை போன்ற இடங்களில் 200 திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
குரேஷி ஆரம்பத்தில் மும்பையில் இருந்துள்ளார். அதன் பிறகு இப்போது ஐதராபாத்தில் தங்கி இருந்து கொண்டு கிரிமினல் காரியங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. ராஜஸ்தானில் எம்.எல்.ஏ வீட்டில் ரூ.7 கோடியை திருடியிருக்கிறார். முன்னா அளித்துள்ள வாக்குமூலத்தில், ``நான் திருடுவதை நிறுத்தமாட்டேன். ஏழைகளை துன்புறுத்தமாட்டேன். கோடீஸ்வரர்கள் மற்றும் பணக்காரர்களிடம் மட்டுமே திருடுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மூன்று மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். தனது குடும்ப உறுப்பினர்களையும் குற்றத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார். குரேஷியிடம் விசாரணை நடத்தி ஈஸ்வர் அகமத், அக்பர் அலிஷேக் ஆகியோரையும் கைது செய்தனர்.
திருடிய நகைகளை குரேஷி ஈஸ்வரிடம் கொடுத்துள்ளார். ஈஸ்வர் மற்றொரு குற்றவாளியான அக்பர் துணையோடு அவற்றை விற்பனை செய்துள்ளார். தற்போது நகைக்கடைக்காரர்களிடம் விற்பனை செய்யப்பட்ட நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர். குரேஷியின் மைத்துனர் பல திருட்டு வழக்குகளில் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அந்த நபரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட குரேஷி மற்றும் அவரின் கூட்டாளிகளை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...