திருமண ஊர்வலத்தில் பொழிந்த `பண' மழை... ரூ.20 லட்சத்தை முண்டியடித்துக் கொண்டு அள...
தஞ்சாவூர்: அரசுப்பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் - ஒரு தலைக்காதலால் வெறிச்செயலா?
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் ரமணி பள்ளியில் பணிக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் மதன்குமார் (30). இவர் ரமணியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மதன்குமாருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அப்போது மதன்குமார், ரமணியை காதலிக்கும் விஷயத்தை தன் பெற்றோரிடம் சொல்லியதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரமணியை பெண் கேட்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் ரமணிக்கு, மதனை திருமணம் செய்வதில் விருப்பமில்லை என்றதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த மதன், ரமணி மீது கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார் ரமணி.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பில் பாடம் எடுத்து கொண்டு இருந்துள்ளார். அப்போது வகுப்புக்குள் சென்ற மதன்குமார் `என்னை திருமணம் செய்து கொள்ள முடியாதுனு சொல்லிட்டீயா?’னு கேட்டுள்ளார். `உன்னை யார் க்ளாஸ்க்கு வர சொன்னது?’னு ரமணி கேட்டதாக தெரிகிறது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் மதன்குமார், ரமணி கழுத்தும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார். அப்படியே சரிந்து விழுந்த ரமணி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதைபார்த்து மாணவர்கள் அதிர்ச்சியில் அலறியுள்ளனர். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அமைச்சர் அன்பில் மகேஸ், ``தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என பதிவிட்டுள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...