Mufasa: `ஹக்குனா மடாடா' - முஃபாசாவுக்குக் குரல் கொடுத்திருக்கும் தமிழ் நடிகர் யா...
தஞ்சாவூர்:``அரசு மருத்துவரைத் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியை..." - சாடும் எடப்பாடி பழனிசாமி
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனைப் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவரை சின்னமனைப் பகுதியைச் சேர்ந்த மதன் குமார் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், மதன் குமார், ரமணியை பெண் கேட்டுச் சென்றபோது, ரமணி அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
அதனால் ஆத்திரமடைந்த மதன் குமார், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில், ரமணி வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும்போது, வகுப்பறைக்கு சென்ற மதன் குமார், ரமணியைக் கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து மதன் குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ``தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியையைக் குத்திக் கொலை செய்தவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ``தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விடியா தி.மு.க ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவலநிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற தி.மு.க அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள விடியா தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம். ஆசிரியர் ரமணி அவர்களின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், விடியா தி.மு.க முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.