தங்க இருப்பை இந்தியாவுக்கு மாற்றும் ஆர்பிஐ! அறியப்படாத காரணங்கள்!!
போர்ச் சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் உலக நாடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்கும் தங்க கையிருப்பை இந்தியாவுக்கு ஆர்பிஐ மாற்றி வருகிறது.
உலகிலேயே அதிக தங்க கையிருப்பை கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு ஒரு முன்னணி இடம் இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
அண்மையில், தீபாவளியையொட்டி வரும் தாந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு, லண்டனில் உள்ள இங்கிலாந்து வங்கியில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 102 டன் தங்கத்தை சப்தமில்லாமல், இந்தியாவின் பாதுகாப்பான இடத்துக்கு இடம் மாற்றியிருக்கிறது ஆர்பிஐ.
இதற்கு முன்பு, இங்கிலாந்து வங்கியிலிருந்து 100 டன் தங்கத்தை உள்நாட்டுப் பெட்டகங்களுக்கு இந்தியா மாற்றியிருந்தது.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு தங்கத்தைக் கொண்டு வருவது மிகவும் ரகசியமாக, சிறப்பு விமானம் மூலம், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது உள்நாட்டில் மிகச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதன் உறுதித் தன்மையையும் இது வெளிப்படுத்துகிறது.
1991-ஆம் ஆண்டு அந்நிய செலாவணி நெருக்கடியைச் சமாளிக்க கையிருப்பில் இருந்த தங்கத்தின் கணிசமான பகுதியை பாங்க் ஆஃப் இங்கிலாந்து எனும் பிரிட்டன் வங்கியில் இந்தியா சேமித்து வைத்திருந்தது.
இந்த நிலையில்தான், தற்போது படிப்படியாக வெளிநாடுகளில் இருக்கும் தங்கத்தை சொந்த நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் பெட்டகங்களுக்கு மாற்றி வருகிறது ஆர்பிஐ.
உலகளவில் நடைபெறும் போர்கள் போன்ற நிலையற்றத் தன்மையால், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், தங்கத்தை பாதுகாப்பாக உள்நாட்டுப் பெட்டகங்களில் வைக்க திட்டமிட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, நாட்டின் ஒட்டுமொத்த தங்க இருப்பு 855 டன்னாக உள்ளது. இதில், கடந்த செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி 510.5 டன் தங்கம் உள்நாட்டுப் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மொத்த தங்க கையிருப்பில் 324 டன் வெளிநாடுகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. (இது முன்பு 413 டன்னாக இருந்தது) அதாவது, இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்புக்கு ஈடாக 308 டன் தங்கம் இருப்பில் உள்ளது. அதற்கும் மேல், வங்கித் துறையின் சொத்து மதிப்பாக 100.28 டன் உள்நாட்டில் தங்கம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 20 டன் தங்கம், ஆர்பிஐ வெளியிட்டிருக்கும் தங்கப் பத்திரங்களின் மதிப்புக்காக கையிருப்பில் உள்ளதாம்.
பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு மாற்றப்பட்ட தங்கத்தின் நகர்வை நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் பிற அமைப்புகளின் அதிகாரிகள் மட்டும் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். உள்நாட்டில் உள்ள தங்கம், மும்பை மற்றும் நாகபுரியில் உள்ள உயர்பாதுகாப்பு மையங்களில் இருக்கும் பெட்டகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.