எலான் எனும் எந்திரன் 3: 1999-லேயே Elon Musk-க்கின் கனவுக்கு உயிர் கொடுத்த `X.com’
1990களின் மத்தியிலேயே இமெயில் மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகமாகிவிட்டது என்றாலும், அத்தனை பிரபலமாகவில்லை. கனடா நாட்டைச் சேர்ந்த இன்டராக் (Interac) என்கிற நிறுவனம் மெயில் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியை பிரபலமாக்க போராடிக் கொண்டிருந்தது.
1999 - 2000 காலகட்டத்தில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே ஒருவர் தன் வங்கிக் கணக்கிலிருந்து மற்றொருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமானால், நேரடியாக வங்கிக்கே சென்று பணம் அனுப்ப வேண்டும் அல்லது காசோலை போன்ற பாரம்பரிய வழியில் தான் பணப் பரிமாற்றங்கள் நடந்து வந்தன. இணைய பணப் பரிமாற்றங்கள் அத்தனை பிரபலமாகாத, வெகுஜன மக்களால் எளிதில் பயன்படுத்த முடியாத காலமது.
Zip2 நிறுவனத்தை விற்று கிடைத்த 22 மில்லியன் அமெரிக்க டாலரில் 12 மில்லியன் டாலரை வைத்து பணப்பரிவர்த்தனையில் ஒரு புதிய புரட்சியைக் கொண்டு வரும் வகையில் x.com வலைதளத்தைத் தன் நண்பர் ஹாரிஸ் ஃப்ரிக்கர், கிரிஸ்டோஃபர் பெனே, எட் ஹோ உடன் இணைந்து தொடங்கினார் எலான் மஸ்க்.
சுருக்கமாக அமெரிக்காவில் ஓடிக் கொண்டிருந்த டாட் காம் புரட்சியில் பங்கெடுக்க வேண்டும், அது அடுத்த தசாப்தத்தில் அத்துறையையே தலைகீழாக மாற்ற வேண்டும் என்பது எலான் மஸ்கின் கணக்கு.
இது ஏதோ ஆபாசப் பட வலைதளப் பக்கம் போலிருக்கிறதே என்று நினைக்கிறீர்களா. இப்படித் தான் எலான் மஸ்கின் நண்பர்களும் கூறினர். ஆனால் x.com என்கிற பெயர் சட்டென மனதில் பதியும், x.com என இணையத்தில் தேடும் போதும் எழுத்து பிழை வராதென எலான் கூறிய காரணங்களை எவராலும் மறுக்க முடியவில்லை.
வாத பிரதிவாதங்களுக்குப் பிறகு 1999 டிசம்பரில் வலைதளம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தைத் தொடங்கிய போது உருவான “e@x.com” என்கிற மின்னஞ்சல் எலான் மஸ்கின் ஃபேவரெட்டாம்.
எங்கும் கிளைகள் இல்லாத ஒரு ஆன்லைன் வங்கி தான் x.com. ஃப்ர்ஸ்ட் வெஸ்டர்ன் நேஷனல் பேங்க் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, x.com வங்கி & மியூச்சுவல் ஃபண்ட் சேவைகளை வழங்கத் தொடங்கியது.
குறிப்பாக ஒரு இமெயில் இருந்தால் போதும், பணம் அனுப்பலாம் என்கிற வசதியை பிரபலப்படுத்த விரும்பியது x.com. மேலும் இன்ஷூரன்ஸ், நிதி மேலான்மை, வரி மேலாண்மை போன்ற சேவைகளையும் கொண்டு வர விரும்பியது x.com.
புதிதாக தங்களிடம் கணக்குத் தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு 20 அமெரிக்க டாலர் கேஷ் கார்ட் எல்லாம் கொடுத்து, ஒட்டுமொத்த அமெரிக்காவையும் திரும்பிப் பார்க்க வைத்தது x.com. முதல் இரு மாதங்களிலேயே சுமார் 2,00,000 வாடிக்கையாளர்கள் இணைந்தனர்.
x.com தொடங்கிய ஓராண்டுக்குள், பல்வேறு சர்ச்சைகள், கருத்து வேறுபாடுகள் காரணமாக, ஹாரிஸ் ஃப்ரிக்கரை வேலையை விட்டுத் தூக்கினார் எலான். இத்தனைக்கும் எலானும் ஃப்ரிக்கரும் பேங்க் ஆஃப் நோவா ஸ்காடியாவில் ஒன்றாக பணியாற்றிய நண்பர்கள்.
அதனைத் தொடர்ந்து கிரிஸ்டோஃபர் பெனே, எட் ஹோ ஆகிய இரு இணை நிறுவனர்களும் x.com நிறுவனத்திலிருந்து வெளியேறினர். ஒட்டுமொத்த x.com நிர்வாகத்தையும் தனக்குப் பிடித்தாற் போல, தனியே தன்னந்தனியே நடத்தத் தொடங்கினார் எலான். இந்த இடத்திலேயே எலான் மஸ்க் “திமிரு பிடிச்சவன், திமிருக்கே பிடிச்சவன்” என்பது அப்பட்டமாக வெளிப்படத் தொடங்கியது.
ஒரு பக்கம் எலான் மஸ்கின் x.com கையில் இருந்த பணத்தை செலவழித்து வாடிக்கையாளர்களை வளைத்துப் போட்டுக் கொண்டிருந்தது. மறுபக்கம் கன்ஃபினிட்டி நிறுவனமும் பணப்பரிவர்த்தனையில் பெரிதாகக் கால் பதிக்க x.com உடன் மிகக் கடுமையாக மல்லு கட்டிக் கொண்டிருந்தது.
முதலில் ஒரு பாம் பைலட்டிலிருந்து (ஸ்மார்ட்ஃபோநின் முன்னோர் வெர்சன்) மற்றொரு பாம் பைலட்டுக்கு இன்ஃப்ராரெட் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் சேவையை வழங்கத் தொடங்கி மெல்ல இணையம் & இமெயில் வழியாகவும் பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கத் தொடங்கியது கன்ஃபினிட்டி.
சத்திரியனா சண்ட போட்டு சாவோமா இல்ல சாணக்கியனா சேர்ந்து வளர்வோமா என்கிற ஆப்ஷன்களுக்கிடையில், இரு நிறுவனமும் இரண்டாவதைத் தேர்வு செய்தனர். ஒரு சுபயோக நன்னாளில் x.com & கன்ஃபினிட்டி ஒன்றிணைந்தது. பிரச்சனை தீர்ந்ததா என்றால் இல்லை. ஒருங்கிணைந்த புதிய நிறுவனத்துக்கு எலான் மஸ்க் முதன்மைச் செயல் அதிகாரியாக நுழைந்தார்.
அந்நிறுவன ஊழியர்கள் மைக்ரோசாஃப்டின் மென்பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விட்டு, யுனிக்ஸ் மென்பொருளைப் பயன்படுத்த வேண்டுமென விரும்பினார். அதோடு கன்ஃபினிட்டி நிறுவனத்தின் தலைவர்களின் ஒருவரான பீட்டர் தீலுக்கும், எலான் மஸ்குக்கும் இடையில் எப்போதும் “நெருப்புடா நெருங்குடா…” தான். விளைவு, பீட்டர் தீல், ராஜினாமா செய்து வெளியேறினார்.
பல்வேறு தொழில்நுட்பக் கோளாறு, ஒத்து வராத பிசினஸ் மாடல், எலானுக்கு ஊழியர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு… என புதிய ஒருங்கிணைந்த நிறுவனத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் முளைத்தன. 2000ஆம் ஆண்டில், எலான் மஸ்க் தேனிலவுக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த போது, பேபல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, எலான் மஸ்குக்கு எதிராக வாக்களித்து, அவரை முதன்மைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து நீக்கிவிட்டு, பீட்டர் தீலை அப்பதவியில் அமர்த்தினர்.
பலவகைச் சேவைகளில் கவனம் செலுத்தாமல், பணப்பரிமாற்றத்தில் அதிக கவனம் செலுத்தினார் பீட்டர் தீல். 2001ஆம் ஆண்டு அந்நிறுவனம் பேபல் என பெயர் மாற்றப்பட்டது. இந்த மாற்றங்களுக்கு இடையில் x.com என்கிற வலைதளத்தையும் பேபல் சேவை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, பேபல் தளத்திலேயே செயல்படத் தொடங்கியது.
2002ல் பேபல் நிறுவனத்தை, இ-பே நிறுவனம் ~1.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. அப்போது பேபல் நிறுவனத்தில் ~11.5% பங்குகளை வைத்திருந்த எலான் மஸ்குக்கு ~176 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்தது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின், x.com தனக்குப் பிடிக்கும் என்கிற ஒரே காரணத்துக்காக, பேபல் நிறுவனத்திடமிருந்து அத்தளத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டார் எலான் மஸ்க்.
தற்போது ட்விட்டர் தளமே, அந்த x.com தளத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மன்னிச்சு… ட்விட்டர் பெயரே x.com என மாற்றப்பட்டுவிட்டது.
பீட்டர் தீல் - பிலான்டிர் & பவுண்டர்ஸ் ஃபண்ட், ஸ்டீவ் ஷென், சாட் ஹர்லி, ஜாவித் கரீம் - யூடியூப் நிறுவனர்கள்
ரெய்ட் ஹாஃப்மென் - லிங்க்ட் இன் & ஃபேஸ்புக்கின் தொடக்க கால முதலீட்டாளர், தற்போது மைக்ரோசாஃப்டின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்… இப்படி 13 பேர் உள்ள குழுவைத் தான் பேபல் மாஃபியா என்பர்.
இவர்கள் பல்வேறு பெருநிறுவனங்களில் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர் அல்லது வெற்றிகரமாக சொந்த நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
x.com அல்லது பேபல் நிறுவனத்தில் பணியாற்றிய இவர்கள், இன்றுவரை நல்ல நட்பு பாராட்டி வருவதாகவும், இவர்களுக்குத் தெரியாமல் பிசினஸ் & டெக் உலகில் எதுவும் நடக்காது என வேடிக்கையாச் சொல்வர். இவர்கள் இணையத்தை பயன்படுத்தும் மக்களுக்கு சாதகமாக இணையவெளியை மாற்றியவர்கள் என புகழ்பவர்களும் உண்டு. “paypal mafia” தேடிப்பாருங்கள், இணையத்தில் நிறைய கதைகள் கிடைக்கும்.
சரி மீண்டும் எலான் மஸ்குக்கு வருவோம்.
அவருக்கு கிடைத்த 176 மில்லியன் டாலரை வைத்துக் கொண்டு என்ன செய்தார்?
ஆர்வக் கோளாறு, முட்டாள், புத்தி சுவாதீனமில்லாதவர் எனப் பெயரெடுத்தார், டிரோல் செய்யப்பட்டார், விமர்சிக்கப்பட்டார்.
(தொடரும்..!)