3 மணி நேரத்தில் 362 மி.மீ... ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத மழை!
Rain Alert: தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னை நிலை என்ன? - வானிலை ஆய்வு மையம் தகவல்! | Live
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``குமரிக்கடல் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ம் தேதி முதல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாக, இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனால், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் வெகு கனமழைப் பெய்ய வாய்ப்பிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்ய வாய்ப்பிருக்கிறது.
மேலும், வரும் 23-ம் தேதி உருவாகக்கூடிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், 24, 25-ம் தேதிகளில், டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...