ஹாக்கி மகளிரணியினருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை..! பிகார் முதல்வர் அறிவிப்பு!
Exit poll: ஜார்க்கண்ட் - மகாராஷ்டிரா; NDA முன்னிலை... கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. 81 தொகுதிகள் இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதற்கட்டத் தேர்தல், 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதியும், மீதமிருந்த 38 தொகுதிகளுக்கு இன்றும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பு, ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 5 மாதங்களுக்குப் பிறகு ஜூலை 28-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார்.
ஹேமந்த் சோரன் முதல்வர் பதவிக்கு வந்ததும், கட்சியின் முக்கிய நிர்வாகியான சம்பாய் சோரன் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் ஐக்கியமானார். இந்த நிலையில்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
இந்த தேர்தலில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், சம்பாய் சோரனை முன்னிறுத்தி, பா.ஜ.க தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக்கணிப்பு வெளியாகியிருக்கிறது. 41 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நிலையில்,
People's Pulse
இந்தியா கூட்டணி - 24 - 37
தேசிய ஜனநாயக கூட்டணி - 44 - 53
மற்றவை - 5 - 9
Matrize
இந்தியா கூட்டணி - 25 - 30
தேசிய ஜனநாயக கூட்டணி - 42 - 47
மற்றவை - 1 - 4
என்கிற ரீதியில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன!
மகாராஷ்டிர மாநிலத்தின் 288 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி (MAVIA) கூட்டணியில் களம் காண்கின்றன. மறுபுறம், பா.ஜ.க, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாயுதி கூட்டணியில் தேர்தலை எதிர்க்கொண்டிருக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி வெற்றிப் பெற்றது. அதனால், சட்டமன்றத் தேர்தலிலும் அதே வெற்றி மீண்டும் உறுதிசெய்யப்படலாம் என அரசியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். ஆனால், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி அரசு, மாநிலம் முழுவதும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி தேர்தலில் மீண்டும் களமிறங்கியிருக்கிறது. எனவே இந்தத் தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி தீவிரமாகியிருக்கிறது. இந்த நிலையில்தான் தேர்தல் முடிவுகள் குறித்தக் கருத்துக்கணிப்பு வெளியாகியிருக்கிறது. 145 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற நிலையில்,
People's Pulse
பாஜக கூட்டணி - 182
காங்கிரஸ் கூட்டணி - 97
மற்றவை - 9
P-Marq
பாஜக கூட்டணி - 137 - 157
காங்கிரஸ் கூட்டணி - 126 - 146
மற்றவை - 2 - 8
Matrize
பாஜக கூட்டணி - 150 - 170
காங்கிரஸ் கூட்டணி - 110 - 130
மற்றவை - 8 - 10
News 24 + Chanakya Strategies
பாஜக கூட்டணி - 152 - 160
காங்கிரஸ் கூட்டணி - 130 - 138
மற்றவை - 6 - 8
Lokshahi Marathi - Rudra
பாஜக கூட்டணி - 128 - 142
காங்கிரஸ் கூட்டணி - 125 - 140
மற்றவை - 18 - 23