வந்தவாசி: வீட்டில் தந்தையின் சடலத்துடன் 5 நாள்கள் தங்கியிருந்த மகன்
Exit Polls : மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை - வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 188 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்புடன் நடந்த இத்தேர்தல் பெரிய அளவில் வன்முறை ஏதுவும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. மாநிலத்தில் நக்சலைட்கள் அச்சுறுத்தல் இருக்கும் கட்சிரோலி மாவட்டத்தில் மக்கள் காலையில் இருந்து மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். கட்சிரோலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 70 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. அருகில் உள்ள பண்டாராவில் 65.88 சதவீதமும், கோண்டியா மாவட்டத்தில் 65 சதவீதமும், கோலாப்பூர் மாவட்டத்தில் 67 சதவீதமும் வாக்குகள் பதிவானது. இன்று பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக விடுமுறை விடப்பட்டு இருந்தது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பீட் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் பாலாசாஹேப் ஷிண்டே வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்ற போது மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார்.
உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது இறந்து போனார். மும்பையில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். பாலிவுட் நடிகர்கள் அனன்யா பாண்டே, ரன்பீர் கபூர், மாதுரி தீட்ஷித், ரவீனா தண்டன், கோவிந்தா, அர்பாஸ் கான், கார்திக் ஆர்யன், சுனில் ஷெட்டி, கரீனா கபூர், சைஃப் அலிகான், பர்ஹான் அக்தர் உட்பட பலரும் மும்பையில் வாக்களித்தனர். தொடர்ந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நடிகர் சல்மான் கான் மும்பை பாந்த்ராவில் பலத்த பாதுகாப்புடன் சென்று வாக்களித்தார். .
பாந்த்ரா கிழக்கு பகுதியில் உத்தவ் தாக்கரே தனது குடும்பத்தினரோடு சென்று வாக்களித்தார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தானேயில் வாக்களித்தார். நடிகர் ஷாருக் கான் தனது மகள், மகன் மற்றும் மனைவியுடன் சென்று வாக்களித்தார். ஷாருக் கான், சல்மான் கான் ஆகிய இருவரும் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
இதனால் அந்த வாக்குச்சாவடியில் அதிக பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானியுடன் சென்று வாக்களித்தார். மகாராஷ்டிராவில் சராசரியாக இன்று பிற்பகல் 5 மணி வரை 58 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 61.44 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது. இம்முறை இறுதி வாக்குப்பதிவு 62 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாசிக் நந்த்காவ் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சமீர் புஜ்பாலுக்கு சிவசேனா(ஷிண்டே) வேட்பாளர் சுஹாஸ் கண்டே கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பின்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணிக்கு 137 முதல் 157 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாவிகாஷ் அகாடிக்கு 126 முதல் 146 இடங்கள் கிடைக்கும் என்று P-MARQ என்ற அமைப்பு நடத்தி இருக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. பாப்புலர் பல்ஸ் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 175 முதல் 195 இடங்கள் வரை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாவிகாஷ் அகாடிக்கு 85 முதல் 112 இடங்கள் கிடைக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேட்ரிக்ஸ் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணிக்கு 150 முதல் 160 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. மகாவிகாஷ் அகாடிக்கு 110 முதல் 130 இடங்கள் கிடைக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. லோக்சாஹி என்ற அமைப்பின் கருத்துக்கணிப்பில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு சம இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கூட்டணியே முன்னிலை பெற்று காணப்படுகிறது. மேட்ரிக்ஸ் கருத்துக்கணிப்பில் 42 முதல் 47 தொகுதிகள் கிடைக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 25 முதல் 30 இடங்கள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 67 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தது.