``ஆட்சிக்கு வந்தவுடன் அதானிக்கு ஆதரவான திட்டங்களை ரத்து செய்வோம்" - தாக்கரே கடைசி நேர பிரசாரம்
மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று முடிகிறது. உத்தவ் தாக்கரே மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அதற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. இதையடுத்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் கடைசி தேர்தல் பிரசார கூட்டத்திற்கு உத்தவ் தாக்கரே ஏற்பாடு செய்திருந்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உத்தவ் தாக்கரே, ''மோடியின் உத்தரவாதம் எடுபடவில்லை. அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி பால்தாக்கரே பெயரை சொல்லி வாக்கு கேட்கிறார்.
பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி மகாராஷ்டிராவில் அதானி ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதானிக்கு ஆதரவான திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். அதானிக்கு கொடுத்த நிலம் திரும்ப பெறப்படும். தாராவி மக்களுக்கு தாராவியிலேயே வீடு வழங்கப்படும். இந்தியாவின் நிதி தலைநகரம் என்ற மும்பையின் அந்தஸ்துக்கு பா.ஜ.க கூட்டணியால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இப்போது நடக்கும் தேர்தல் துரோகிகள் வெற்றி பெறவேண்டுமா அல்லது மகாராஷ்டிராவை நேசிக்கக்கூடியவர்கள் வெற்றி பெறவேண்டுமா என்பதை முடிவு செய்யக்கூடியது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி வெற்றி பெற்றால் குஜராத்தில் பட்டாசு வெடிப்பார்கள். இப்போது ஆட்சியில் இருப்பவர்களின் நண்பர்கள் மும்பையை கொள்ளையடிக்கிறார்கள்.
ஊழல்வாதிகள், துரோகிகள், கொடுங்கோலர்கள்தான் இந்த ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கின்றனர். தேவைப்பட்டால் மும்பையின் தன்னாட்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மும்பை மெட்ரோபாலிடன் பெருநகர ஆணையத்தின் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்படும். மும்பையின் வளர்ச்சியை அதிகரிக்க நிதி அயோக் மும்பை மெட்ரோபாலிடன் பிராந்தியத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்க சதி நடக்கிறது.
மகாராஷ்டிராவில் உள்ள 90 ஆயிரம் வாக்குச்சாவடிகளையும் கண்காணிக்க குஜராத்தில் இருந்து பா.ஜ.க ஆட்களை கொண்டு வந்திருப்பதாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார். நாளை அவர்கள் மும்பை மற்றும் மகாராஷ்டிராவை பிடுங்க திட்டமிடலாம். நான் சொல்வது பொய்யல்ல. பங்கஜா முண்டே சொன்ன பிறகுதான் சொல்கிறேன். பாபாசாஹேப் அம்பேத்கருக்கு பிரதமர் மோடிதான் பாரத் ரத்னா விருது கொடுத்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சொல்கிறார். நாளை ராவணன், கான்சா, அப்சல் கான் ஆகியோரையும் பிரதமர் மோடிதான் கொன்றதாக சொல்வார்''என்றார்.
இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் சரத்பவார் அல்லது நானாபட்டோலே கலந்து கொள்ளவில்லை. மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் மற்றும் இதர தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...