Mufasa: `ஹக்குனா மடாடா' - முஃபாசாவுக்குக் குரல் கொடுத்திருக்கும் தமிழ் நடிகர் யா...
"அதிமுக-வுடன் கூட்டணி இல்லை" - போட்டுடைத்த விஜய்... உடைந்த உளவுத்துறை கேம்?!
சமீப நாள்களாக, 'அ.தி.மு.க-வுடன் த.வெ.க கூட்டணி அமைக்கப் போகிறது', '154 இடங்களில் அ.தி.மு.க-வும் 80 இடங்களில் த.வெ.க-வும் கூட்டணி அமைத்துப் போட்டியிட போகின்றன', 'அ.தி.மு.க கூட்டணியில் துணை முதல்வராகப் போகிறார் விஜய்' எனப் பலவாறான செய்திகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.
அத்தனை செய்திகளையும் ஒரே ஊதில் ஊதி அணைத்திருக்கிறார் த.வெ.க தலைவர் விஜய். சமீபத்தில் த.வெ.க-வின் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமையப் போவதாக பரபரப்பப்படும் செய்தி தவறான தகவல். அப்படியொரு திட்டத்தில் த.வெ.க இல்லை" என்ற தகவலை பகிர்ந்துள்ளார். அ.தி.மு.க தரப்பிலிருந்தும், "விஜய் இன்னும் அரசியலில் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். அவரோடு கூட்டணி அமைக்கப் போவதாக நாங்கள் சொல்லவில்லையே.." என விளக்கமளித்திருக்கிறார்கள்.
ஆக, 'அ.தி.மு.க - த.வெ.க கூட்டணி அமையப்போவதாக செய்தி எங்கிருந்து பரவியது, இதில் யாருக்கு என்ன லாபம்..?', விவரமறிய விசாரித்தோம்.
அந்தச் செய்தியை தமிழக உளவுத்துறைதான் பரப்பியதாகச் சொல்கிறார்கள் காவல்துறையில் இருப்பவர்களும் த.வெ.க-வின் சீனியர் நிர்வாகிகளும். அதுதொடர்பாக நம்மிடம் விரிவாகப் பேசியவர்கள், "கட்சி மாநாட்டிலேயே, 'தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம்' எனச் சொல்லிவிட்டார் விஜய். அதேநேரத்தில், கூட்டணிக்கான கதவையும் திறந்துவைத்தார். எங்கேயும் அவர் தனித்துப் போட்டியிடுவதாகச் சொல்லவில்லை. இந்தச் சூழலில், அ.தி.மு.க-வுடன் அவர் கூட்டணிக்குச் செல்லப்போவதாக தவறான தகவலை உளவுத்துறைதான் கிளப்பியது. அதன்மூலமாக, தி.மு.க கூட்டணியிலிருக்கும் கட்சிகளை குழப்பிவிடலாம் என உளவுத்துறை திட்டமிட்டது.
'விஜய் தனித்துப் போட்டியிட்டால் அவருடன் கரம் கோக்கலாம். அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்குச் சென்றுவிட்டால், அந்தக் கூட்டணிக்கு நாம் எப்படி செல்வது. அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க-வும் அணிசேர்ந்துவிட்டால் அந்தக் கூட்டணியில் நம்மால் எப்படி இருக்க முடியும்..?' என தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகளெல்லாம் யோசிக்கத் தொடங்கிவிடும். அதைத்தான் உளவுத்துறையும் எதிர்பார்த்தது. அதையொட்டிதான் அ.தி.மு.க - த.வெ.க கூட்டணி என்கிற வதந்தி பரவியது. இதனால், தி.மு.க எந்தளவுக்கு பயனடையப் பார்த்ததோ, அதே அளவுக்கு அ.தி.மு.க-வினரும் பயனடைய பார்த்தனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, 'வலுவான கூட்டணியை அமைத்துத் தருவேன்' என்றார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், உருப்படியாக எந்தக் கூட்டணியும் அமையவில்லை. தவிர, பிரிந்தவர்களை ஒன்றுசேர்த்து கட்சியை வலிமைப்படுத்த வேண்டுமென்ற முணுமுணுப்பும் அ.தி.மு.க-வுக்குள் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இதையெல்லாம் சமாளிப்பதற்கு வலுவான கூட்டணி ஒன்றை அமைக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் எடப்பாடி. அதற்காகத்தான், உளவுத்துறை கிளப்பிவிட்ட வதந்தியை தங்களுக்குச் சாதகமாக அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொண்டனர். வலுவான கூட்டணி அமையப் போவதாக கட்சி வட்டாரங்களில் விஜய்யை முன்வைத்துப் பேசத் தொடங்கினர். அதன்மூலமாக, விஜய் கட்சிக்கு தாவும் மனநிலையில் இருக்கும் அ.தி.மு.க-வினரையும் முடக்கி உட்கார வைத்துவிட முடியும் என்பது எடப்பாடியின் அரசியல் கணக்காக இருந்தது. அதையெல்லாம் ஒரே ஒரு அறிக்கையில் தகர்த்து எறிந்துவிட்டார் விஜய்.
விஜய்யின் ஒப்புதலோடு த.வெ.க-வின் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அந்த அறிக்கையில், 'எங்களின் அரசியல் எதிரி, கொள்கை எதிரி யார் என்பதை நாங்கள் தெளிவாகவே கூறியிருக்கிறோம். இந்தச் சூழலில், அ.தி.மு.க-வுடன் நாங்கள் கூட்டணி அமைக்கப்போவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அரசியல் விமர்சகர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் தான்தோன்றித்தனமாக வதந்தியைப் பரப்புகின்றனர்' என விளக்கமளித்திருக்கிறார். உளவுத்துறையின் ஆபரேஷனை விஜய் இப்படி தவிடுபொடியாக்குவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. 'அ.தி.மு.க - த.வெ.க கூட்டணி' என்கிற விவகாரத்தைக் கிளப்பி, விஜய்யை லைம் லைட் அரசியலில் இருந்து விலக்கி, ஒரு சிறு கட்சியாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுவும் ஆனந்தின் அறிக்கையால் உடைபட்டுவிட்டது.
இன்றைய சூழலில், கட்சியை வலுப்படுத்தும் வேலையை மட்டும்தான் த.வெ.க செய்கிறது. அமைப்புரீதியாக 100 மாவட்ட அமைப்புகளை உருவாக்குவதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்றிய அளவிலும் அணிகளின் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் ஆயத்தமாகி வருகிறது. கூட்டணி விவகாரத்தில் தேர்தல் நெருக்கத்தில்தான் முடிவெடுக்க திட்டமிட்டிருக்கிறார் விஜய். தனித்துப் போட்டியிடும் யோசனையும் அவரிடம் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் தேர்தல் நெருக்கத்தில்தான் அவர் முடிவெடுப்பார்" என்கிறார்கள் விரிவாக.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...