தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய 113 வயது மூதாட்டி..!
மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், 113 வயதான காஞ்சன்பென் பாட்ஷா என்ற மூதாட்டி தனது வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில், மும்பையில் 113 வயது மூதாட்டி ஒருவர் தனது வயது மற்றும் உடல் பலவீனத்தையும் கருத்தில் கொள்ளாமல், வாக்களித்தேயாக வேண்டும் என்ற நோக்கத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினைச் செலுத்தியுள்ளார்.
113 மூதாட்டி ஒருவர் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்களித்தது அங்கிருந்தோரை ஆச்சரியப்படவைத்தது. வாக்களித்தப் பின்னர் மூதாட்டி அசைக்கமுடியாத நம்பிக்கையையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தினார்.
மும்பையில் வசித்துவரும் காஞ்சன்பென் ஒவ்வொரு மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலிலும் வாக்களித்து வருகிறார். இந்த செயலை தவறாமலும், அர்ப்பணிப்புடனும் செய்துவருகிறார். வயதான வாக்காளருடன் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரும் வந்திருந்தார்.
காஞ்சன்பென் குறித்து அவர் கூறுகையில், வயது முதிர்ந்த போதிலும், காஞ்சன்பென் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களித்துவிடுவார். அவர் கடமையை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவார். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைக் குடிமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் உத்வேகத்துடன் நடந்துகொள்வார் என்று அவர் கூறினார்.