Doctor Vikatan: பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை வருமா?
Doctor Vikatan: குழந்தைகளுக்கு தினமும் எவ்வளவு பால் கொடுக்கலாம்? நிறைய பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு உடல்பருமன் அதிகரிக்கும் என்பது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்
பால் என்றில்லை, எந்த உணவானாலும் ஒட்டுமொத்தமாக கலோரி அதிகமானாலே, உடல் எடை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான பால் கொடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே இதற்கு பதில் சொல்ல முடியும்.
ஃபுல் கிரீம் மில்க் எனப்படும் கொழுப்பு நீக்கப்படாத பால் என்றால் அதில் கலோரியும் அதிகமிருக்கும் என்பதால், அதைக் குடிக்கும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்கலாம். அதுவே, கொழுப்பு சதவிகிதம் குறைவாக உள்ள பால் குடிக்கும் குழந்தைகளுக்கு உடல் எடை அவ்வளவாக அதிகரிக்காது.
பால் என்பது புரதச்சத்தும் கால்சியம் சத்தும் மிக்கது என்பதை எல்லோரும் அறிவார்கள். எனவே, அது உடல் வளர்ச்சிக்கும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. வைட்டமின் டி, பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகளும் பாலில் இருக்கும்.
குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக பால் கொடுத்தால், அதன் விளைவாக அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னையும் வரலாம். அதாவது திரவ உணவான பால் அவர்களது வயிற்றை நிரப்பிவிடுவதால், திட உணவுகள் எடுப்பது குறையும். அது சரியானதல்ல. குழந்தைகளுக்கு தினமும் 400 மில்லி பால் கொடுப்பது போதுமானதாக இருக்கும். அப்படி தினமும் 400 மில்லி பால் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதில் சர்க்கரை சேர்ப்பீர்கள். அதனாலும் உடல் எடை கூடும். பெற்றோர், பாலில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு உள்ளது என்பது தெரிந்து குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டியது முக்கியம்.
குழந்தைகள் எவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கிறார்கள் என்பதும் இதில் கவனிக்கப்பட வேண்டும். சில குழந்தைகள் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். அவர்கள், வழக்கத்தைவிட சிறிதளவு பால் அதிகமாக எடுத்துக்கொண்டாலும், உடலியக்கம் காரணமாக அது அவர்களுக்கு பருமனை ஏற்படுத்தாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.