தஞ்சாவூர்: அரசுப்பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் - ஒரு தலைக்காத...
சிஎம்டிஏ நிர்வாகத்தை கண்டித்து கோயம்பேடு வியாபாரிகள் திடீர் மறியல்
சென்னை: சென்னை கோயம்போடு காய்கறி சந்தைக்கு வாகனங்கள் வந்து செல்லக்கூடிய முக்கிய நுழைவு வாயில்களை பூட்டி சென்னை பெருநகர வளா்ச்சி குழும நிர்வாகம்(சிஎம்டிஏ) அட்டூழியம் செய்வதாக கோயம்பேடு வியாபாரிகள் புதன்கிழமை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இந்த மறியலுக்கு சிஎம்டிஏ நிர்வாகம் செவிசாய்க்காத பட்சத்தில் கோயம்பேடுக்கு எந்த அமைச்சர்கள் வந்தாலும் அவர்களை வழிமறித்து அனைத்து வியாபாரிகளும் ஒன்றிணைந்து போராட்டத்தை கையில் எடுப்பதாக தெரிவித்தனர்.
கோயம்போடு காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரம், கா்நாடகம் , கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் கீரை வகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இதை வாங்கிச்செல்ல நாள்தோறும் சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இருந்து சிறு வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனா். இதனால், கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் எப்போது அதிகமாகவே காணப்படும்.
குறிப்பாக அதிகாலை நேரங்களில் சில்லறை வியாபாரிகளின் வருகையால் சந்தை நேரிசல் மிகுந்து காணப்படும்.
இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு கோயம்பேடு காய்கறி சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி சந்தைக்குள் வரும் லாரிகளை வழிமறித்து வியாபாரிகள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து வந்த சிஎம்டிஏ அதிகாரிகள் பேச்சுவார்த்தை அடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வாகனங்கள் வந்து செல்லக் கூடிய முக்கிய நுழைவு வாயில்களை பூட்டி சென்னை பெருநகர வளா்ச்சி குழும நிர்வாகம்(சிஎம்டிஏ) அட்டூழியம் செய்வதாக தமிழ்நாடு வியாபாரிகள் சங்கபேரவை தலைவர் அருண்குமார் தலைமையில் கோயம்பேடு வியாபாரிகள் புதன்கிழமை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இதையும் படிக்க |உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
இது தொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது:
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வாகனங்கள் வந்து செல்லக்கூடிய 7 முதல் 14 ஆவது நுழைவு வாயில்களை சிஎம்டிஏ நிர்வாகம் பூட்டியுள்ளது.
இந்த நுழைவு வாயில்கள் தான் பெரிய கடைகளுக்கு காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய முக்கிய வழித்தடமாகும். இந்த வாயில்கள் பூட்டப்பட்டுள்தால் மொத்த கோயம்பேடு நிர்வாகமும் முடங்கியுள்ளது.
இது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் சிஎம்டிஏ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே ஒருமுறை இதுபோன்று நுழைவு வாயில்களை பூட்டியததால் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து மீண்டும் நுழைவு வாயில்களை திறந்தனர்.அப்போது வாய்மொழியாக சிஎம்டிஏ அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை தற்போது அதிகாரிகள் மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.
இதனால் மொத்த விலை வியாபாரிகள் மற்றும் சிறுகுறு வியாபாரிகள், விவசாயிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவார்கள். காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் வாகனங்கள் சந்தைக்குள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை சிஎம்டிஏ நிர்வாகத்திடம் கூறியும் கண்டுகொள்ளாததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் சிஎம்டிஏ நிர்வாகம் முக்கிய நுழைவு வாயில்களை மூடியதுடன் காய்கறிகளை ஏற்றி வரும் வாகனத்தின் சக்கரத்தில் பூட்டுபோட்டு அதிகாரிகள் அபராதம் போடுகின்றனர். அந்த பணம் அரசுக்கு செல்கிறதா என தெரியவில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக உடனடியாக சிஎம்டிஏ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கடந்த முறை போல வாய்மொழி வாக்குறுதிகளாக அல்லாமல் இந்த முறை எழுத்துப்பூர்வமான வாக்குறுதியை அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஒட்டுமொத்த வியாபாரிகளும் இணைந்து மாபெரும் போராட்டமாக நடத்துவோம். கோயம்பேடு வரும் அமைச்சரை வழிமறித்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.
பின்னர் சிஎம்டிஏ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் வியாபாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.