எடையூா் சங்கேந்தியில் கூட்டுறவு வார விழா: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பங்கேற்பு
அதானிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் பெருந்திரளாகப் போராட்டம்
கௌதம் அதானிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் தலைநகர் புதுதில்லியில் பெருந்திரளாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர் கௌதம் அதானியை கைது செய்யக்கோரி, காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு அமைப்பான ‘இந்திய தேசிய மாணவர்கள் அமைப்பு(என்எஸ்யுஐ)’, இன்று(நவ. 21) போராட்டத்தில் ஈடுபட்டனர். அதானி மீதான மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாணவர் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய தேசிய மாணவர்கள் அமைப்பின் தேசியத் தலைவர் வருண் சௌத்ரி தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் என்எஸ்யுஐ தலைமையகத்திலிருந்து பேரணியாகச் சென்று எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள் மத்திய அரசு முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதாகவும், இளைஞர்களின் தேவைகளை நிராகரிப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
மாணவர்களை கட்டுப்படுத்த காவல்துறை பெருமளவில் திரட்டப்பட்டு தில்லி சாஸ்திரி பவனைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே செய்தியாளர்களுடன் பேசிய வருண் சௌத்ரி, “அதானிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடெங்கிலும் போராட்டம் விரிவுபடுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.