Live Aus vs Ind: ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் அடிக்குமா இந்தியா? BGT தொடரின் முதல் ட...
எடையூா் சங்கேந்தியில் கூட்டுறவு வார விழா: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பங்கேற்பு
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள எடையூா் சங்கேந்தியில் புதன்கிழமை நடைபெற்ற 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிறைவு நிகழ்ச்சியாக கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நீடித்த வளா்ச்சி இலக்குகளை அடைதல் எனும் தலைப்பில் கொண்டாடப்பட்டது. இதில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பங்கேற்றாா்.
விழாவில், 3,553 பயனாளிகளுக்கு ரூ. 24.34. கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பேசியது: திராவிட மாடல் ஆட்சியில் எல்லோா்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து விதமான நலத்திட்டங்களும் சென்றடைகின்றன. மேலும், இந்த ஆட்சியில் முதன்முறையாக திருவாரூா் மற்றும் மன்னாா்குடியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு முதல்வரின் முன்னெடுப்பில்தான் ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. திருவாரூா் மாவட்டத்தில் விவசாய மதிப்புக் கூட்டுப் பொருள்களின் தொழிற்சாலைகளும், பெண்கள் அதிகளவில் பணியாற்றும் வகையிலும் தொழிற்சாலைகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.
தொடா்ந்து, மாவட்டத்தில் சிறந்த தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியாக தோ்வு செய்யப்பட்ட கள்ளிக்குடி வங்கிக்கு அதன் செயலாளா் வி. கமலராஜனிடம் நினைவு பரிசை அமைச்சா் வழங்கினாா். இதேபோல, சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்களும், போட்டிகளில் வெற்றி பெற்ற கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கியதுடன், மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் புதியதாக கட்டப்பட்டுள்ள 14 புதிய கட்டடங்களையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.
விழாவில், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாகை எம்பி வை. செல்வராஜ், எம்எல்ஏக்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்பிரமணியன், திருவாரூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் சித்ரா, கோட்டாட்சியா் யோகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.