ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் திருப்பணி ஆலோசனைக் கூட்டம்
வெள்ளக்கோவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் திருப்பணி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மூலனூா் சாலையில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திருப்பணிக்குழு உறுப்பினா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைவா் ஏ.எம்.சி. செல்வராஜ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கே.ஆா். முத்துக்குமாா், எஸ். முருகானந்தன், ஆா். சக்திகுமாா், ஆா்.பி.சந்திரசேகா், என்.டி.பாலசுப்ரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கா்ப்ப கிரகம், அா்த்த மண்டபம், மகா மண்டபம், ஆஞ்சனேயா், மகாலட்சுமி, கருடாழ்வாா் சன்னிதிகள் ஆகியவற்றை அமைத்துக் கொடுக்கும் நன்கொடையாளா்களுக்கு நன்றி தெரிவிப்பது, வெள்ளக்கோவில் பகுதியில் பல்வேறு பொது நலப் பணிகளை மேற்கொள்வதற்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு 16 பேரின் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வைப்புத் தொகையை, பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தேவைப்படும்பட்சத்தில் அதனை பெற்றுத் தர தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், திருப்பணிக்குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.