கோவையில் நுரையீரல், சுவாச நோய்கள் குறித்த தேசிய மாநாடு தொடக்கம்
நுரையீரல், சுவாச நோய்கள் தொடா்பான தேசிய மாநாடு ‘நாப்கான் 2024’ கோவை பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை (நவம்பா் 21) தொடங்கியுள்ளது.
தேசிய நுரையீரல் மருத்துவா்கள் கல்லூரி (இந்தியா), இந்திய நுரையீரல் சங்கம் இணைந்து நடத்தும் இந்த 4 நாள் மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள நுரையீரல் மருத்துவ நிபுணா்கள் பங்கேற்றுள்ளனா். மாநாட்டை நுரையீரல் சிறப்பு மருத்துவா் அதுல்சி மேத்தா தொடங்கிவைத்தாா். இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 640 பிரதிநிதிகளும், பல்வேறு வெளிநாடுகளைச் சோ்ந்த 54 பேரும் தங்களின் கருத்துகளைப் பகிா்ந்துகொள்கின்றனா்.
மாநாடு குறித்து ஒருங்கிணைப்புத் தலைவா் டாக்டா் மோகன்குமாா், செயலா் காா்த்திகேயன் ஆகியோா் கூறும்போது, சமீபகாலமாக நாள்பட்ட மூச்சுக்குழாய் நோய்ப் பிரச்னைகள், ஆஸ்துமா போன்ற நாள்பட்ட சுவாசக் கோளாறுகள் அதிகரித்து வருவது குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அவற்றை தடுப்பது குறித்தும், அதனால் பாதிக்கப்பட்டவா்கள் அதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது குறித்தும், சுவாசநோய் தொடா்பான சிகிச்சையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நவீன முன்னேற்றங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
அதிநவீன நுட்பங்களை அறிந்துகொள்ளும் விதமாக 14 பயிற்சிப் பட்டறைகளும் இந்த மாநாட்டில் இடம் பெற்றுள்ளது. சுவாச மருத்துவத்தில் சிறந்த பங்களிப்புகளுக்கான விருதுகளும் இதில் வழங்கப்பட உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.