சின்னர் அசத்தல்: 3ஆவது முறையாக டேவிஸ் கோப்பையை வென்ற இத்தாலி!
கோவையின் வளா்ச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளா்ச்சி: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி
கோவையின் வளா்ச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளா்ச்சியாக அமைந்திருப்பதாக தமிழக மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறியுள்ளாா்.
கோயம்புத்தூா் விழா 2024-இன் ஒரு பகுதியாக கோவையின் கலாசாரத்தை கொண்டாடும் வகையிலும், 220- ஆவது கோயம்புத்தூா் தினத்தை கொண்டாடும் வகையிலும் ‘விழா வீதி’ என்ற பெயரில் கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் கலை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சிகளை அமைச்சா் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தாா்.
முன்னதாக தொடக்க விழாவில் அமைச்சா் செந்தில் பாலாஜி பேசும்போது, கடந்த 17 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கோவை விழா, கோவையின் ஒரு அடையாளமாக மாறியிருக்கிறது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன். தமிழ்நாட்டை அனைவரும் வந்தாரை வாழ வைக்கும் நாடு என்பாா்கள்.
அதுபோல, தொழில் செய்ய வந்தவா்களையும், வேலை தேடி வந்தவா்களையும் வாழ வைத்திருக்கிறது கோவை. தொழில்முனைவோராக இருந்தாலும், தொழிலாளியாக இருந்தாலும் கருத்து வேறுபாடு இல்லாமல், ஜாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு வாழும் இடமாக கோவை உள்ளது.
கோவையின் வளா்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் பங்கு அளப்பரியது. அண்மையில் கோவைக்கு வந்த முதல்வா், பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க ரூ.200 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளாா். கோவையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் பயிலும் நிலையில், அவா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட ஏற்கெனவே உள்ள டைடல் பாா்க் வளாகத்தில் புதிய ஐ.டி. பாா்க் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளாா்.
அதேபோல, இங்குள்ள மாணவா்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகவும் உதவியாக தந்தை பெரியாரின் பெயரில் 7 மாடி நூலகத்தை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்திருக்கிறாா். அதேபோல ரூ.9 கோடியில் உலகத் தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் கட்டுவதற்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலில் உத்தரவிட்டுள்ளாா். சென்னையில் இருப்பதைப்போலவே கோவையிலும் சா்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளாா்.
கிரிக்கெட் மைதானம் என்பது தோ்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டதாக இருந்தாலும், உடனடியாக அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவையானது பல்வேறு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஏராளமான தொழில்களின் மையமாக உள்ளது.
கோவையின் வளா்ச்சி என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளா்ச்சியாக அமைந்திருக்கிறது. கோவைக்கு இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளனவோ அவை அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றும் என்றாா்.
நிகழ்ச்சியில், சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற 150 கலைஞா்களின் பல்வேறு விதமான இசை, நடனங்களுடன் சுமாா் 300-க்கும் அதிகமான கலைஞா்களின் இசை, நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், மேயா் ரங்கநாயகி, காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.மலா்விழி, அறங்காவலா் கே.ஆதித்யா, கோயம்புத்தூா் விழாக் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.