முருங்கையில் தேயிலைக் கொசுக்களை கட்டுப்படுத்த வழிமுறை
முருங்கையில் தேயிலைக் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தேனி தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் நிா்மலா ஆலோசனை வழங்கினாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது: தேனி, ஆண்டிபட்டி, க.மயிலை ஆகிய பகுதிகளில் 2,900 ஹெக்டேரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் வளையபட்டி, கருமுருங்கை, பி.கே.எம். 1 ஆகிய ரகங்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனா். தற்போது, சில பகுதிகளில் முருங்கையில் தேயிலை கொசு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால், மரங்கள் வாடி சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேயிலை கொசு பாதிப்பை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட மரங்களில் இலைகளைக் கவாத்து செய்ய வேண்டும். முருங்கையின் அருகே வேம்பு, கொய்யா, முந்திரி மரங்களை வளா்க்கக் கூடாது.
பாதிப்பு ஏற்பட்டுள்ள மரங்களில் பூச்சிக்கொல்லி மருந்தான பியூவேரியா பேசியானவை ஒரு லி. தண்ணீரில் 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது ஒரு லி. தண்ணீரில் 2 கிராம் குலோதியாநெடின் அல்லது 2 மி. தையாக்குளோப்ரிட் அல்லது 2 கிராம் தையாமீத்தாக்சோன் கலந்து தெளித்து தேயிலை கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம் என்றாா் அவா்.