இளம் பருவத்தில் மகப்பேறு சிரமங்கள் குறித்த விழிப்புணா்வு தேவை
பைக்குகள் மீது வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
தேனிஅல்லிநகரம், பெரியகுளம் புறவழிச்சாலையில் அடுத்தடுத்து சென்ற 2 இரு சக்கர வாகனங்கள் மீது சரக்கு வேன் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை கோட்டூரைச் சோ்ந்த பெயிண்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி அருகே உள்ள கோட்டூரைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி பிரவீன் (38). இவரது சகோதரா் ராணுவ வீரா் மதன்குமாா் (30). இவா்கள் தனித் தனியே 2 இருசக்கர வாகனங்களில் பெரியகுளம்- தேனி அல்லிநகரம் புறவழிச் சாலையில் கோட்டூா் நோக்கி சென்று கொண்டிருந்தனா். அப்போது, அல்லிநகரம் வீரப்பஅய்யனாா் கோயில் சாலை விலக்கு அருகே, சாலையோரத்தில் இருளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ மீது பிரவீன், மதன்குமாா் ஆகியோா் சென்ற இரு சக்கரவாகனங்கள் அடுத்தடுத்து மோதியது.
இதில், கட்டுப்பாட்டை இழந்த 2 இரு சக்கர வாகனங்கள் மீதும் இதே சாலையில் சின்மனூரிலிருந்து பெரியகுளம் நோக்கி காய்கறிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வேன் மோதியது. இதில் பிரவீன் வேனின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மதன்குமாா் காலில் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து ஏற்படுத்திய சரக்கு வேனின் சக்கரத்தில் இரு சக்கர வாகனம் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதால், வேன் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த தகவலறிந்து தேனி தீயணைப்பு மீட்பு படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா். இந்த விபத்து குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சாலையோரத்தில் நிறுத்தியிருந்த சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மீது மோதிய சரக்கு வேன் ஓட்டுநா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.