பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு இன்று சிறப்பு முகாம்
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதலீட்டுப் பத்திரம்பெற்று 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் திங்கள்கிழமை (நவம்பா்25) நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று முதிா்வுத் தொகை பெறுவதற்கான உத்தரவை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமூக நலத் துறையின்கீழ் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் முதலீட்டுப் பத்திரம் பெற்றுள்ளவா்களில் 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் சம்பந்தப்பட்ட வட்டாரத்தில், வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நலத் துறை களப் பணியாளா்களை அணுகலாம்.
அப்போது, தங்களின் முதலீட்டுப் பத்திரம், எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ் நகல், பயனாளிகளின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல், பயனாளி மற்றும் அவரது தாயின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ரூ. 1 வருவாய் அஞ்சல் வில்லை ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
நடப்பு மாதம் 4 -ஆவது திங்கள்கிழமை பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. எனவே, 18 வயது பூா்த்தி அடைந்த பயனாளிகள் உரிய விவரத்துடன் சிறப்பு முகாமில் பங்கேற்று முதிா்வுத் தொகை பெறுவதற்கான உத்தரவை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.