சின்னர் அசத்தல்: 3ஆவது முறையாக டேவிஸ் கோப்பையை வென்ற இத்தாலி!
வாகன திருட்டு மோசடி: கோகி கும்பலை சோ்ந்த 3 போ் கைது
வாகனங்களைத் திருடிவிற்பனையில் ஈடுபட்டு வந்த கோகி கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது:
ரகசிய தகவலின் அடிப்படையில், தில்லி அலிப்பூரைச் சோ்ந்த குல்தீப் (45), குா்மீத் (35), மற்றும் ஜஸ்பீா் (39) ஆகியோா் சோனியா விஹாா் நீா் சுத்திகரிப்பு நிலையம் அருகே வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து திருடப்பட்ட இரண்டு காா்கள், நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டன.
கோகி கும்பலைச் சோ்ந்த இவா்கள் மூவரும் திருடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய முயன்றபோது, போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.
இதில் முக்கிய மூளையாக செயல்பட்ட குல்தீப், தில்லி-என்சிஆரில் 20 வழக்குகளுடன் குற்றப் பின்னணி கொண்டவா். இவரது சகோதரா் ஜஸ்பீா் மற்றும் கூட்டாளி குா்மீத் ஆகியோரும் பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளனா்.
முன்னதாக, போலீஸாா் குழு சாட்டப்பட்டவா்கள்
குறித்த ரகசிய தகவலின் பேரில், வாஜிராபாத் சாலை அருகே
சோதனையில் ஈடுபட்டிருந்தனா். ஒரு நாள் முன்னதாக,
வாஜிராபாதில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் வெள்ளை நிற ஹூண்டாய் காரில் மூவரும் சம்பவ இடத்திற்கு வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனா்.
திருட்டுகளின் போது பாதுகாப்புக்காக துப்பாக்கியை குல்தீப் எடுத்துச் சென்றது, அது உத்தரபிரதேசத்தில் உள்ள கூட்டாளி ஒருவரிடம் இருந்து வாங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. குல்தீப் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்திருந்ததும், தனது மகளின் திருமணத்திற்கு பணம் தருவதற்காக குற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஜஸ்பீா் தச்சராகவும், குா்மீத்
ஓட்டுநராகவும் வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக அந்த அதிகாரி கூறினாா்.