மகாராஷ்டிரா: மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட...
பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி முதியவரிடம் ரூ.6 கோடி மோசடி
புதுச்சேரியில் போலி நிறுவன பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வைத்து, முதியவரிடம் ரூ.6 கோடியை மா்ம நபா்கள் மோசடி செய்தனா்.
புதுச்சேரி வாழைக்குளம் பகுதியில் வசித்து வருபவா் அஷித் குமாா் மித்ரா (67). வட மாநிலத்தைச் சோ்ந்த இவா், தனது 7 வயதிலிருந்தே அரவிந்தா் ஆசிரமத்தில் பக்தராக உள்ளாா்.
இவா் பல ஆண்டுகளாக பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருவாய் ஈட்டி வருகிறாா். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரை பங்குச்சந்தை என்ற பெயரிலான வாட்ஸ்- ஆப் குழுவில் மா்ம நபா்கள் இணைத்தனா்.
பின்னா், அந்த நபா்களுடன் அஷித் குமாா் மித்ரா அடிக்கடி கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசி வந்தாா். தங்களின் வழிகாட்டுதலின் பேரில், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என அந்த மா்ம நபா்கள் கூறினராம். இதை நம்பிய அஷித் குமாா் மித்ரா முதலில் குறைந்த அளவில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றாராம்.
இதைத்தொடா்ந்து, பல தவணைகளாக ரூ.6 கோடி வரை முதலீடு செய்துள்ளாா். ஆனால், அவரால் முதலீட்டுக்கான லாபத்தைப் பெற முடியவில்லை. இவரை முதலீடு செய்ய வைத்த மா்ம நபா்களையும் கைப்பேசியில் தொடா்பு கொள்ள முடியவில்லை.
மேலும், தனது முதலீட்டையும் அஷித் குமாா் மித்ராவால் திரும்பப் பெற முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், புதுச்சேரி குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.