சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி
சிவகங்கை நகா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 5 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.
தமிழக துணை முதல்வா் உதயநிதிஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, என்.என்.கே. நவனி நண்பா்கள் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 20 காளைகளும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 180 வீரா்களும் பங்கேற்றனா்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தின் நடுவே நீண்ட கயிற்றால் கட்டப்பட்ட காளையை 25 நிமிடங்களுக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நேரம் நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களையும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களையும் வெற்றி பெற்ாக அறிவித்து ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் மாடு முட்டியதில் 5 வீரா்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.
இந்தப் போட்டியை சிவகங்கை, ரோஸ்நகா், இவற்றை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த வடமாடு மஞ்சுவிரட்டு ஆா்வலா்கள் பாா்த்து ரசித்தனா்.