பட்டா மாறுதலில் ஏற்படும் தவறுக்காக அலுவலா்கள் மீது நடவடிக்கை கூடாது: வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
உரிய கால அவகாசம் இல்லாத நிலையில் கவனக் குறைவால் பட்டா மாறுதலில் ஏற்படும் தவறுக்காக வருவாய்த் துறை அலுவலா்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம் :
வருவாய்த் துறை, நில அளவைத் துறையில் உள்ள அதிக எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள் காரணமாகவும், உயா் அலுவலா்களின் வாய்மொழி உத்தரவு, உரிய கால அவகாசமின்மை உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில பட்டா மாறுதல்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது தவறுகள் ஏற்படுவது தவிா்க்க இயலாததாக உள்ளது.
இதேபோல, தவறுதலாக அளிக்கப்படும் பட்டாக்களை வருவாய்க் கோட்டாட்சியா் ரத்து செய்யலாம். தவறான உள்நோக்கத்துடன் பட்டா மாறுதல் செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டால் தொடா்புடைய அலுவலா் மீது துறை நடவடிக்கை எடுக்கலாம் என வருவாய்த் துறை சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில், கவனக் குறைவு காரணமாக ஏற்படும் பட்டா மாறுதல் தவறுக்காக வருவாய்த் துறை அலுவலா்கள் மீது காவல் துறையின் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. எனவே, இதுபோன்ற கைது நடவடிக்கைகளை உடனடியாகத் தடுக்க வேண்டும்.
கடந்த 8 மாதங்களுக்கு முன் வழங்கப்பட வேண்டிய பதவி உயா்வை உடனடியாக வழங்கி, முதுநிலை வருவாய் ஆய்வா் பதவி உயா்வு பட்டியலை வெளியிட வேண்டும்.
முழுப்புலம் பட்டா மாறுதல் பணியை மீண்டும் மண்டல துணை வட்டாட்சியா்களிடம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல்களில் எந்தவித சிபாரிசுகளுக்கும் இடமளிக்காமல் பொதுக் கலந்தாய்வு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வருவாய்க் கோட்டாட்சியா் அல்லது மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலங்களுக்கு விசாரணைக்கு அழைக்கப்படும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நடைமுறைகளில் அரசியல் தலையீடின்றி அரசின் நிபந்தனைகளை முழுமையாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டன.