கூகுள் மேப்பை பின்பற்றிய கார்... இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் மூவர் பலி!
கூகுள் மேப் வழியில் பயணம்... உடைந்த பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்த கார்.. 3 பேர் பலி!
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சோகம்..!
பொதுவாக வெளியிடங்களுக்கு வாகனங்களில் செல்லும்போது ஜி.பி.எஸ்.வழிகாட்டுதலில் செல்வது வழக்கம். அவ்வாறு ஜி.பி.எஸ்.வழிகாட்டுதலில் செல்லும்போது சில நேரங்களில் தவறான வழியில் செல்வதுண்டு. சில நேரங்களில் எதாவது விபரீதமான இடத்திற்கு வழிகாட்டிவிடும். உத்தரப்பிரதேசத்தில் அது போன்ற ஒரு விபரீத சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரித்பூர் என்ற இடத்தில் ஆற்றில் இடிந்து போன மேம்பாலம் ஒன்று இருக்கிறது. ஆற்று நீர் செல்லும் இடத்தில் மேம்பாலம் இடிந்திருக்கிறது. கடந்த மழையின் போது பாலம் இடிந்து விழுந்துவிட்டது. பரேலி என்ற இடத்தில் இருந்து தாதாகஞ்ச் என்ற இடத்தை நோக்கிச் செல்லும் வழியில் உள்ள ராம்கங்கா ஆற்றில் இந்த மேம்பாலம் இருக்கிறது.
உடைந்த பாலத்தில் தடுப்பு இல்லை..
நேற்று விவேக்குமார் என்பவரும் அவரது சகோதரர் மற்றும் நண்பர் என மூன்று பேர் காரில் அந்த வழியாக வந்தனர்.
அவர்கள் ஜி.பி.எஸ்.மூலம் பாதையை பார்த்தபடி காரை ஓட்டி வந்தனர். உடைந்திருந்த பாலத்தில் தடுப்பு எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் ஆற்றுப்பாலம் சரியாகத்தான் இருக்கிறது என்ற எண்ணத்தில் காரை வேகமாக ஆற்றுப்பாலத்தின் மீது ஓட்டியபோது, கார் உடைந்த மேம்பாலத்தில் இருந்து 50 அடி ஆழத்தில் கீழே விழுந்தது.
மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் - குடும்பத்தினர்
ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது. இதனால் கார் ஆற்றுக்குள் மூழ்கியது. இதனை பார்த்த கிராம மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆற்றுக்குள் மூழ்கிய காரை மீட்டனர். அதில் இருந்த மூன்று பேரும் இறந்துவிட்டனர். இந்த விபத்துக்கு மாவட்ட நிர்வாகம்தான் பொறுப்பு என்று இறந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
"மேம்பாலம் சேதம் அடைந்திருக்கும் நிலையில், அதில் தடுப்பு வைத்து யாரும் செல்லாத வகையில் அடைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருந்துவிட்டது. பாலத்தின் வழியை நம்பி பயணம் செய்தவர்கள் பலியாகியுள்ளனர்" என்று இறந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
`ஜி.பி.எஸ்.சில் அப்டேட் செய்யவில்லை'
இது குறித்து போலீஸ் அதிகாரி அஸ்தோஷ் சிவம் கூறுகையில்,''காரில் பயணம் செய்தவர்கள் ஜி.பி.எஸ்.பார்த்துக்கொண்டே பயணம் செய்துள்ளனர். ஆனால் ஆற்றுப்பாலம் சேதம் அடைந்த தகவல் ஜி.பி.எஸ்.சில் அப்டேட் செய்யப்படவில்லை'' என்று தெரிவித்தார். கூகுள் மேப்பால் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்து போன மூன்று பேரும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.