செய்திகள் :

மனித புத்தகம்; அறிவகம்; பேராசிரியர்... - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை -1

post image
தி புரஃபசர் “என்னுடைய பெயர் இவா. சுருக்கமாக இவானிட்டி மிஷேல்.”

கட்டிலில் அமர்ந்திருந்த லூயிஸ் மிஷாவ்விடம் (Lewis Michaux) முக மலர்ச்சியோடு கைகுலுக்கினேன். வழக்கத்துக்கு மாறான என்னுடைய அறிமுகத்தால் புருவங்களை உயர்த்திய அவருடைய கண்களில், நோய்மையின் சோர்வையும் மீறி ஒரு சிநேக மனோபாவம் மின்னியது. சைகையால் எதிரில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னார். இதனால் ஏமாற்றமாகவும், இவரை நேர்காணல் செய்ய முடியாதோ என்ற பதற்றமும் எனக்கு ஏற்பட்டது. தொண்டைப் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருபவரை பேட்டிக்காக பேசச் சொல்லி கட்டாயப்படுத்த முடியுமா? தயக்கத்துடன் தொடங்கினேன்.

“நான் The Spirit பத்திரிகையில் பயிற்சி செய்தியாளராக வேலை செய்கிறேன். உங்களை பேட்டி எடுக்க நிர்வாகம் சார்பில் என்னை அனுப்பியிருக்கிறார்கள்…”

“என்னைப் பேட்டி எடுக்கவா? இவா மேடம், அந்தப் பத்திரிகை காமிக் பத்திரிகையாச்சே…” வியப்பு மேலிட கம்பீரமாக கேட்டார். அவருடைய உருவத் தோற்றத்தோடு, அந்தக் குரல் பொருந்தவில்லை. குள்ளமாக ஒல்லிய தேகத்தோடு முதுமை அப்பியிருந்தாலும் முகம் பொலிவோடு இருந்ததைப் போல அவரின் குரலுக்கும் வயது கூடவில்லை.

அவருடைய வியப்புக்கு காரணமில்லாமலில்லை. நான் பத்திரிகையாளர் பயிற்சிக்காக சேர்ந்திருக்கும் வாரப் பத்திரிகை துப்பறியும் காமிக்ஸ் ஆகும். மிகப் பிரபலமான அந்தப் பத்திரிகை, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இருந்து வெளிவரும் இருபது வெவ்வேறு நாளிதழ்களின் ஞாயிறு இணைப்பாக விநியோகிக்கப்படுகிறது. ஏறக்குறைய 50 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்படும் காமிக்ஸ் புத்தகத்தில், ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை பிரசுரிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்ததில் வியப்பில்லை.

“ஆமாம்… பேட்டி எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். எப்படி இருக்கீங்க புரஃபசர்? உங்களுடைய உடல் நிலை எப்படி இருக்கிறது? இதுவரை மக்கள் உங்களை அன்பாக அழைத்து வந்த, ‘பேராசிரியர்’ என்ற பட்டப்பெயர், ஒரு வழியாக இப்போது பட்டம் வென்ற பெயராக மாறிவிட்டதல்லவா? நியூ ஜெர்ஸி மாகாண பல்கலைக் கழகம் (Seton Hall University) உங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்ததை எப்படி உணர்கிறீர்கள்…” லூயிஸ் மிஷாவ்விடம் நேர்காணலின் முதல் கேள்வியை கேட்டுவிட்டு, பதிவாகிறதா என டிஜிட்டல் வாய்ஸ் ரெக்கார்டரை கவனித்தேன்.

“உடம்பு இப்ப பரவாயில்ல மேடம். உங்களோட பேசுற அளவுக்கு ஹெல்த்தியா இருக்கேன்ல. இல்லேண்ணா நீங்க பேட்டி எடுக்க முடியாதே…” சொல்லிவிட்டு சிரித்தவர், அருகிலிருந்த பெண்ணைப் பார்த்து முறுவலித்தார். முதல் கேள்வியிலேயே தன்னுடைய அங்கதப் பேச்சை உதிர்த்தார்.

மிஷாவ்வின் நக்கலடிக்கும் குணாதிசியம் குறித்து தகவல் சேகரித்து வைத்திருந்தேன். இந்த நையாண்டிச் சீண்டலால் அவர் இயல்பு நிலையில் இருக்கிறார் என மகிழ்ந்து நானும் சிரித்தேன். நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருபவரை நேர்காணல் செய்வது இங்கிதமான செயலா என்ற தயக்கம் மருத்துவமனைக்கு வரும் வரையில் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. இப்போது அந்தக் கவலை மறைந்து உற்சாகமானேன்.

“பள்ளிக் கல்வியையே முடிக்காத கறுப்பன் நான். அறிவுச் செல்வத்தை வாரி வழங்கி, கறுப்பர்களை அடிமைத்தளையிலிருந்து கரை சேர்க்க நான் நடத்திய புத்தக விற்பனை நிலையம் உதவியதால், உணர்வெழுச்சி அடைந்த கறுப்பர்கள் என்னை புரஃபசர் என அன்போடு அழைத்தனர். அதுவே நாளடைவில் நிலைத்து விட்டது. கல்லூரியில் டாக்டரேட் பட்டம் பெற்றவர்களை விளிக்கும் பேராசிரியர் என்ற பதத்துக்கு நான் தகுதியானவன் என மக்கள் நினைத்ததை இப்போது ஒரு கல்வி நிறுவனமும் ஒப்புக் கொண்டது மகிழ்ச்சிதான்.”

Lewis Michaux

எத்தனையோ புத்தகக் கடைகள் அமெரிக்காவில் இயங்கி வருகின்றன. அப்படியான கடைகளில் ஒன்றுதான் லூயிஸ் மிஷாவ் நடத்தி வந்த புத்தகக் கடையும். ஆனால், வெறுமனே கடை என்பதையும் தாண்டி, வரலாற்றில் நிலைபெற்று விடும் கலகக்காரர்களின் சாகசங்களை உட்பொதிந்து வைத்திருக்கிறது அந்தக் கடை.

லூயிஸ் மிஷாவை நேர்காணல் செய்ய கேட்டுக் கொண்டவுடன், சில முன் குறிப்புகளை தயாரிப்பதற்காக அவரைப் பற்றியும் அவர் நடத்தி வந்த புத்தகக் கடை பற்றியும் அதுவரை வெளிவந்த செய்திகளை தேடித் தேடி வாசித்தேன்.

சில எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் என அவரைப் பற்றி அறிந்தவர்களிடம் தகவல்களைச் சேகரித்த போது, அந்தப் புத்தகக் கடையைப் பற்றிய சித்திரம் என் முன் இப்படித்தான் விரிந்தது:

வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிரான சிந்தனைகளின் உற்பத்திக்கூடம்

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கருத்தியல் ஆயுதங்களின் பாசறை

ஆஃப்ரிக்கவாத சித்தாந்தத்தை பட்டை தீட்டும் பட்டறை

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில், கறுப்பர்கள் அடர்த்தியாக வசிக்கும் ஹார்லெம் நகரில் அமைந்திருந்த, தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடை (National Memorial African Bookstore) என்ற அந்தப் புத்தகக் கடையின் பெயர்ப் பலகையில், "The House of Common Sense and The Home of Proper Propaganda" என்று எழுதப்பட்டிருக்கும். சுருக்கமாக ‘அறிவகம்’ எனச் சொல்லலாம். முத்திரை வாசகத்துக்கு ஏற்ப, அச்சிடப்பட்ட புத்தகங்களை விற்கும் அங்காடியாக மட்டுமல்லாமல், அறிவாயுதம் தாங்கிய ஆயுதக் கிடங்காகவும் செயல்பட்டுள்ளது அந்தப் புத்தகக் கடை.

கடையின் முன்பு, கறுப்பின மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களும் பொதுக்கூட்டங்களும் நடந்திருக்கின்றன. ஆஃப்ரிக்க கண்டத்தின் பெரும் தலைவர்களும், அமெரிக்க கண்டத்தில் கறுப்பர்களுக்காக குரல் கொடுத்த போராளிகளும் சிந்தனையாளர்களும் போராட்டங்களில் பங்கெடுத்திருக்கின்றனர். இந்தப் போராட்டங்கள் பற்றிய குறிப்புகள் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறும் போதெல்லாம் லூயிஸ் மிஷாவ்வும் அவருடைய புத்தகக் கடையும் தவறாமல் இடம்பெறும்.

உணவுக்கு வழி செய்யும் ஒரு தொழிலாகத்தான் புத்தகக் கடையை தொடங்கினார் லூயிஸ் மிஷாவ். ஆனால், புத்தகம் என்ற பேராயுதத்தின் பலத்தை அறிந்த அவர், வெறுமனே வருவாய் ஈட்டித்தரும் ஓர் அங்காடியாக அல்லாமல், அறிவாயுதங்களை பட்டை தீட்டும் பட்டறையாக தன்னுடைய புத்தகக் கடையை அடையாளப்படுத்தினார். அவ்வாறே அந்த அங்காடியை மாற்றிக் காட்டி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பெருந்துயரம் என்னவென்றால், அந்தப் புத்தகக் கடை இப்போது செயல்பாட்டில் இல்லை.

கறுப்பரான மிஷாவ், ஆரம்பக் கல்வியைக் கூட தாண்டாவிட்டாலும் 'மனிதப் புத்தகமாக' வாழ்ந்த அவரை, 'பேராசிரியர்' என்றே கறுப்பர்கள் அன்பொழுக அழைத்தனர். கல்விச் சாலைகளில், வகுப்பறைகளில் பாடம் நடத்துபவர்கள் மட்டும்தான் ஆசிரியர்களா என்ன? சிந்தனையைச் செதுக்கும் பாமரனும் பேராசிரியராக முடியும், ஒடுக்கப்படுபவர்களின் எழுச்சிக்கு விதையை நடுவதன் மூலம் - என்பதை எதார்த்தத்தில் வாழ்ந்து காட்டியவரைத்தான் நான் நேர்காணல் செய்து கொண்டிருக்கிறேன்.

லூயிஸ் மிஷாவ், தன்னை இறைமறுப்பாளராக அறிவித்துக் கொண்டாலும், ஓரிறையில் நம்பிக்கை கொண்ட கறுப்பினப் போராளி மால்கம் X உடன் அதி தீவிர நட்பு பாராட்டினார் என்ற தகவலே என்னை இவ்வளவு தூரத்திற்கு இழுத்து வந்தது. இன்று மால்கம் X (பிறப்பு: மே 19, 1925 - இறப்பு: பிப்ரவரி 21, 1965) அவர்களின் 51வது பிறந்த தினம் என்பதால், அவருடைய வழிகாட்டியை நேர்காணல் செய்வதில் உள்ளூர எனக்கும் கிளர்ச்சியாக இருந்தது.

தன்னுடைய 'அறிவகத்தை' மால்கம் X பயன்படுத்திக் கொள்ளும் வகையில், கடையின் உள்ளே அவரை வைத்துப் பூட்டி விட்டு, வெளியே சென்று விடுவார் லூயிஸ் மிஷாவ். சிறைச்சாலை அறையில், விளக்குகள் அணைக்கப்பட்ட பின்பு, நடைபாதை விளக்கின் வெளிச்சத்தில், சிறைக் காவலர்களை ஏமாற்றிவிட்டு இரவு முழுவதும் தூங்காமல் புத்தகம் வாசித்த மால்கம் X, புத்தகக் குவியலின் மடியில் அறிவமுதம் அருந்தியிருக்கிறார் பல இரவுகளில் பூட்டிய இந்த புத்தகக் கடையின் உள்ளே! ஒப்புவமை இல்லாத தலைவராக உருவெடுத்து, அடிமைத்தளைக்கு எதிராக கறுப்பர்களை வீறுகொண்டெழச் செய்த தலைவனான மால்கமை உருவாக்கியதில் மிஷாவ்வின் பயிற்சிப் பாசறைக்கும் பெரும் பங்கு உண்டு.

“எனக்கு தெரிந்த ஒரு Lord இருக்கிறார், அவர் Landlord” என சிரித்துக் கொண்டே உதிர்க்கும் மிஷாவ்வின் பிரபலமான முத்திரை வாசகத்தைக் கேள்விப்பட்டு ஆச்சரியத்தோடு அவரைப் பார்க்க வந்தேன். நான் கேள்விப்பட்டதைப் போல, கோணங்கித் தனத்துக்குப் பெயர் போன நகைச்சுவை உணர்வு புற்றுநோய் தாக்கத்துக்குப் பின்பு இப்போதும் அவரிடம் குறையவில்லை.

அமெரிக்காவில் கறுப்பர்களின் குடியுரிமை போராட்டக் களத்தில் மிஷாவ்வின் பெயர் பிரபலம் என்றால், அவரின் சகோதரர் சாலமன் லைட்ஃபுட் மிஷாவ் (Solomon Lightfoot Michaux) அமெரிக்க கண்டம் முழுவதும் கறுப்பர்கள் - வெள்ளையர்கள் என்ற வேறுபாடின்றி அனைத்து குடிமக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம். லூயிஸ் மிஷாவ்வின் சகோதரர் சாலமன் தீவிரமான கிறிஸ்தவ மதபோதகர் என்பது சுவையான முரண்தான். சாலமன் லைட்ஃபுட் மிஷாவ் அமெரிக்காவின் மிகப் பிரபலமான கிறிஸ்தவ மதபோதகர் மட்டுமல்ல, அமெரிக்க அதிபருக்கு ஆலோசனைகளை வழங்கும் நெருக்கமான புள்ளியும்கூட.

மால்கம் X

லூயிஸ் மிஷாவ்வின் புத்தகக் கடையில் கற்ற படைக்கலன்களோடு, அவரின் சகோதரர் சாலமனின் தேவாலயத்திலேயே, மால்கம் X இஸ்லாமிய பிரச்சாரம் மேற்கொண்டது வரலாற்று சுவாரஸ்யம். இப்படி முரண்பாடுகளின் குவியலான ஒரு புத்தகக் கடைக்காரரை பேட்டி எடுக்க வந்திருக்கிறேன்.

- மால்கம்.

`இவர் திகிலைக் கிளப்பும் ஓவியங்களை வரைய என்ன காரணம்?’ - Edvard Munch-ன் அலறல் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

எழுத்தாளர் நரனின் 'வேட்டை நாய்கள்' - பதைபதைக்கும் கதை இனி ஆடியோ புக் வடிவில்! | Vikatan Play

எழுத்தாளர் நரனின் வேட்டை நாய்கள் வாசகர்களால் கொண்டாடப்பட்ட நாவல். தூத்துக்குடிப் பின்னணியில் விரிகிறது கதை. பெரிய பர்லாந்து, சின்ன பர்லாந்து சகோதரர்களிடையே ஹார்பரில் யார் கோலோச்சுவது என்பதில் பல ஆண்டு... மேலும் பார்க்க

நீரதிகாரம் நாவல் இப்போது Audio வடிவில் | Vikatan Play | Neerathikaaram

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷார் ஏன் அந்த அணையைக் கட்டுனாங்க... எப்படி அந்த இடத... மேலும் பார்க்க

`கொலை நகரமான டீ எஸ்டேட்’ : எரியும் பனிக்காடு புத்தக பின்னணி| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

திடீரென பூச்சியாய் மாறிய மனிதனின் கதை - காஃப்காவின் `உருமாற்றம்’ | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

வாய்மை எனப்படுவது யாதெனின்! - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க