ராஜீவ் காந்தி `ஸ்கெட்ச்’ - செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக-வில் இணைந்த கோவை நாதக-வினர்!
நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் 24-ம் தேதி தி.மு.க-வில் இணைந்தனர். அவர்கள் நா.த.க-விலிருந்து வெளியேறி, தி.மு.க-வில் இணைந்ததன் பின்னணியில் இருப்பது தி.மு.க மாணவரணித் தலைவரும் முன்னாள் நா.த.க நிர்வாகியுமான ராஜீவ் காந்தி என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், `“தி.மு.க மற்றும் அதன் தலைவர்களை கடுமையான விமர்சிப்பதோடு திராவிட எதிர்ப்பு அரசியலை இளைஞர்கள் மத்தியில் மிகத் தீவிரமாக கட்டமைக்கிறது நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் கருத்துவாக்கத்தை உடைக்க வேண்டிய அவசியமும் முதல் தலைமுறையினரின் வாக்குகளை ஈர்க்க தேவையும் தி.மு.க-வுக்கு இருந்தாலும் நேரடியாக நா.த.க-வினரை விமர்சிப்பது அவர்களுக்கு சாதகமாக போய்விடும் எனக் கருதுகிறார்கள். ஆகையால் நா.த.க-வின் முக்கியப் புள்ளிகளை தி.மு.க பக்கம் இழுத்து நா.த.க-வை பலவீனப்படுத்தும் அஸ்திரத்தை கையிலெடுத்திருக்கிறது தி.மு.க.
இதற்கான அசைன்மென்ட் தி.மு.க மாணவரணி நிர்வாகியான ராஜீவ் காந்தி வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. சீமானின் சர்வாதிகாரப் அணுகுமுறையால் அதிருப்தியில் இருக்கும் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அடையாளம் கண்டு தி.மு.க-வில் இணைக்க மும்முரம் காட்டுகிறார் ராஜீவ் காந்தி. அதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் இளைஞர்கள் பலரை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.க-வில் இணைத்திருக்கிறார். மேலும் சில மாவட்ட, மாநில நிர்வாகிகள் சிலர் அவருடன் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தெரிகிறது” என்றனர்
நா.த.க-வினர் சிலரிடம் பேசும்போது, ``சீமானின் `எடுத்தேன் கவிழ்த்தேன்` பேச்சும், `நான்’ என்ற மனநிலையும்தான் நிர்வாகிகள் வெளியேற பிரதான காரணமாகிறது. ஆகையால் ஜனநாயகமற்ற கட்சி செயல்பாடுகளையும் உடனடியாக சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசியல்படுத்தப்பட்ட இளைஞர்கள் மாற்று முகாம்களுக்கு செல்லத் தயாராகும்போது, அவர்களை ஆசுவாசப்படுத்தி, தக்கவைப்பதே நல்ல கட்சிக்கு அழகு. கட்சியின் இந்த வீக்னஸை பயன்படுத்தி நிர்வாகிகளிடம் பேரம்பேசி ஆள் தூக்கும் அண்டர்கிரவுண்ட் வேலைகளை ஆரம்பித்திருக்கிறது தி.மு.க” என்றனர் வருத்தத்துடன்.
தி.மு.க மாணவரணியினர் சிலரிடம் பேசினோம், ``நாம் தமிழர் கட்சியை குறிவைத்து ஆள் தூக்குகிறோம் என்பதெல்லாம் உண்மைக்கு மாறானது. போலித் தமிழ் தேசியம் பேசி ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க-வோடு கைகுலுக்கும் ஒரு தலைமையின்கீழ் எங்களால் செயல்பட முடியாது என்பதை உணர்ந்த நாம் தமிழர் கட்சியினர் பலர் தாமாக வந்துதான் தி.மு.க-வில் இணைகிறார்கள். கட்சியை காப்பாற்ற தெரியாதவர்கள் எதை எதையோ பேசி சமாளிக்கப் பார்க்கிறார்கள்” என்றனர்.
நிர்வாகிகள் வெளியேறுவது தொடர்கதையானாலும் `போனால் போகட்டும்’ என்ற மனநிலையில்தான் தலைமை இருப்பதை எண்ணி வருந்துகிறார்கள் கட்சியின் முக்கியப் புள்ளிகள்.
விழித்துக் கொள்வாரா சீமான்?